சென்னையில் இவ்வளவு தேசிய கொடிகள் விற்பனையா?

நாட்டின் 77-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்டு 15-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தமிழகத்தில் மட்டும் 20 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டன.
அதற்காக கடந்த 7-ம் தேதி சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து தபால் நிலையங்களிலும் தேசியக் கொடிகளுக்கான விற்பனை துவங்கியது. ஒரு கொடியின் விலை ரூ. 25-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை நேரிலும் வந்து வாங்கலாம் அல்லது தபால் மூலமாகவும் பெறலாம்.
பொதுமக்களுக்கு மட்டுமின்றி அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட தபால் துறையில் கொடிகள் வாங்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தமிழகத்தில் மட்டும் ஆகஸ்டு 15-ம் தேதிக்குள் 20 லட்சம் தேசியக் கொடிகள்
விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அதில் சென்னையில் மட்டும் 6.5 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்திட இலக்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 7-ம் தேதி முதல் தற்போது வரை சென்னை மண்டலத்தில் 80 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை பலரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது.
இதுதொடர்பாக தபால்துறை சார்பில் வெளியிட்டுள்ள தகவலில், பொதுமக்கள் தேசியக் கொடியை வாங்க வேண்டும் என்பதற்காக ஞாயிற்றுக்கிழமையிலும் தபால் நிலையங்கள் செயல்படும். தனிநபராகவோ, கூட்டமாகவோ அல்லது நிறுவனங்களில் பெயரிலோ தேசியக் கொடிகளை வாங்கிச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.