1. Home
  2. தமிழ்நாடு

5 மாநிலத் தேர்தலிலும் பா.ஜ.க. தோல்வியை தழுவப் போகிறது: முதல்வர் ஸ்டாலின்..!

1

பூந்தமல்லி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி இல்லத் திருமண விழா திருவான்மியூரில் நேற்று நடந்தது. இதில் மணமக்கள் டாக்டர் ஏ.கே.எஸ்.தாரணி-டாக்டர் எம்.பரத் கவுசிக் ஆகியோரை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இன்று நாட்டில் இருக்கும் நிலைமைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா? என்ற நிலையில்தான் இன்றைக்கு சூழல் அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, மத்தியில் இருக்கும் பா.ஜனதா ஆட்சி தனக்கு எதிராக யார் எந்த கருத்தைச் சொன்னாலும் அவர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது, அதற்காக வருமானவரித்துறை, அமலாக்கத்துறையைப் பயன்படுத்துகிறார்கள். இப்போது செல்போனில் பேசுவதை பதிவுசெய்யும் முறையைக் கையாளுகிறார்கள்.

ஒரு பெரிய தனியார் செல்போன் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களே எச்சரித்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்களுக்கெல்லாம் அவர்களே கடிதம் எழுதி சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இப்படி ஒரு செய்தி வந்தவுடன் மத்திய அமைச்சர் ஒருவர், இதுகுறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். செய்வதையும் செய்து விட்டு, விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று ஒரு செய்தியை வெளியிடுகிறார் என்று சொன்னால் அந்த அளவுக்கு நாட்டிலே இன்றைக்கு ஒரு கொடுமையை சந்திக்கக் கூடிய நிலையில் நாம் இன்று தவித்துக் கொண்டு இருக்கிறோம்.

பாரதிய ஜனதாவை பொறுத்தவரை தோல்வி பயம் வந்துவிட்டது. இன்டியா கூட்டணி, அவர்கள் எதிர்பாராத வகையில் அமைந்துள்ளது. மக்களிடம் போய் மோடி ஆட்சியின், கொடுமைகள், அக்கிரமங்கள், அநியாயங்களை, அவலநிலைகளை இன்று நாம் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். விரைவில் 5 மாநில தேர்தல்கள் வர இருக்கிறது. 5 மாநிலத்திலும் பா.ஜனதா தோல்வியை தழுவப்போகிறது என்ற செய்திதான் நமக்கு வந்து கொண்டு இருக்கிறது.

எனவே அவர்களுக்கு இன்று பயம் வந்துவிட்டது. அந்த பயத்தின் காரணமாக இன்றைக்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் முறியடித்து நாட்டிற்கு ஒரு நல்ல விமோசனத்தை உருவாக்கி தருவதற்கு, இந்தியாவை காப்பாற்றுவதற்கு இன்டியா கூட்டணிக்கு நீங்கள் அத்தனை பேரும் வரும் பாராளுமன்ற தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியை தேடித்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like