தனியார் பள்ளிகளுக்கு முக்கிய எச்சரிக்கை..! இனி பள்ளிகளில் அனுமதியின்றி முகாம்கள் நடத்தக்கூடாது..!
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.சி உள்ளிட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகளில் NSS, NCC. Scout & Guide மற்றும் JRC போன்ற அமைப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறான அமைப்புகளின் செயல்பாடுகளை பள்ளிகளில் செயல்படுத்த மாநில அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், அமைப்புகளின் செயல்பாடுகளை செயல்படுத்த, மாநில அமைப்பு மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளியில் இருத்தல் வேண்டும். மாநில அமைப்பு மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது. இந்த அமைப்புகளின் மூலமாக மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது, மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலமாகவும், மாணவிகளுக்குப் பெண் ஆசிரியைகள் மூலமாகவும் மட்டுமே பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் வழங்கப்பட வேண்டும்.
இவ்வமைப்புகள் சார்ந்த அனைத்து செயல்பாடுகளும், மாநில அமைப்பால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே பயிற்சி முகாம் நடத்தப்பட வேண்டும். அமைப்புக்களின் செயல்பாடுகள் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ, மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் முகாம்கள் நடத்தப்படும் போது, உரிய அமைப்பைச் சார்ந்த (NSS, NCC, Scout & Guide மற்றும் JRC) மாவட்ட, மாநில பொறுப்பாளரின் கடிதத்தின் அடிப்படையில் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கு தனியார் பள்ளிகள் அனுப்பி ஒப்புதல் பெறப்படவேண்டும்.
மாவட்ட, மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதி இல்லாமல் எந்தவொரு முகாமும், பயிற்சியும் நடத்த ஏற்பாடு செய்யக் கூடாது. பள்ளி அளவிலோ, மாவட்ட மற்றும் மாநில அளவிலோ முகாம்கள் நடத்தப்படும் போது மாணவர்கள் பாதுகாப்பிற்கு ஆண் ஆசிரியர்களும், மாணவியர்கள் பாதுகாப்பிற்கு பெண் ஆசிரியர்களும் சார்ந்த அமைப்பின் விதிமுறைகளின்படி போதிய எண்ணிக்கையில் நியமிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்களின் பாதுகாப்பின்றி எந்தவொரு அமைப்பு சார்பாகவும் மாணவ, மாணவியர்களை முகாம்களில் ஈடுபடுத்தக்கூடாது. மேலும், பயிலும் பள்ளியிலோ அல்லது வெளியிடங்களிலோ முகாம் நடத்தப்பட வேண்டியிருப்பின், ஒவ்வொரு மாணவ, மாணவியரின் பொற்றோரிடமும் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறப்பட்டு அதன் பிறகே மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
மேலும், பெற்றோர்கள் மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதியின்றி மாணவ, மாணவியரை முகாம்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்பதை அனைத்துப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகள் அலுவலர் தெரிவிக்க வேண்டும். தனியார் பள்ளிகள் இந்த விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அந்தப் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.