முக்கிய அறிவிப்பு : இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு மாணவர்கள் வைத்திருக்க வேண்டிய விவரங்கள் என்னென்ன..!
தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (மே 6) முதல் தொடங்கியது. மேலும், பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10-இல் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணத்தை மாணவர்கள் பூர்த்தி செய்யும்முன் கையில் முக்கியமான விவரங்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதில், சாதிச் சான்றிதழ், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான உறுதிக் கடிதம், மாணவர்களின் கல்வி மேலாண்மைத் தகவல் மைய எண் எனப்படும் இஎம்ஐஎஸ் எண், ஆதார் எண், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றை வைத்துக் கொண்டு மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 445-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகின. இதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பும் வகையில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்கியது.
தேவையான விவரங்கள்:
இதையடுத்து, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிஇ., பி.டெக் மற்றும் பி.ஆர்க். ஆகிய இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு இணையதளத்தில் ஜூன் 6-க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி., எஸ்டி., எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இணையவழியில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களின் வசதிக்காக, தமிழகம் முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேவை மையம் குறித்த விவரங்களை, இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம். விண்ணப்ப பதிவு தொடர்பாக மாணவர்களுக்கு சந்தேகங்கள் இருப்பின், 1800-425-01110 என்ற எண்ணுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு கேட்டறியலாம். மேலும், மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம்.