1. Home
  2. தமிழ்நாடு

முக்கிய அறிவிப்பு..! கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் – தமிழக அரசு அதிரடி!

1

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது தமிழக அரசு.மேலும் தேர்தல் வாக்குறுதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வந்தது. இதில் பெண்களுக்கான இலவச பேருந்து வசதி முதலியன அடங்கும். அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாடு அரசு ஆனது கொரோனாவால் தாய் மற்றும் தந்தையை இழந்த 382 குழந்தைகள் பெயரில் தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ₹19.1 கோடியும் , கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த 13,682 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் என ₹410.46 கோடியும் வங்கியில் டெபாசிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது அந்த பணம் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, பெண்களை போற்றி பாதுகாப்பதிலும், அவர்களின் நலனில் அதிக அக்கறைக் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், கல்லூரியில் பயிலும் மாணவிகளை ஊக்கப்படுத்திடும் வகையில் புதுமைப்பெண் திட்டம், படிப்பை முடித்தவுடன் அவர்கள் தொழில் தொடங்கிட தமிழ்நாடு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகள் வழங்கிடும் திட்டம், பணிபுரியும் மகளிரை பாதுகாத்திட வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தோழியர் விடுதி திட்டம், திருமண உதவித் திட்டம், கிராமப்புற பெண்கள் பயன்பெறுகின்ற வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பல்வேறு உதவித் திட்டங்கள், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், குழந்தைகள் ஆகியோர் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய விடியல் பயணத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி மகளிர் நலன் பேணப்படுவதோடு, இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது கொரோனா எனும் பெரும் நோய்த் தொற்று தமிழ்நாட்டை அச்சுறுத்திய காலத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலன் காப்பதில் தன்னையே முன்னிறுத்திக் கொண்டு, மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் போதிய சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. இந்நோய் தொற்றினால்‌ பாதிக்கப்பட்டு தாய்‌, தந்தை இருவரையும் இழந்த 382 குழந்தைகளின்‌ பெயரில்‌ தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.19.10 கோடி; வங்கிகளில் வைப்பீடு செய்து குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும்‌ போது அவர்களுக்கு வட்டியுடன்‌ வழங்கும் இத்திட்டத்தினால் தாயுமானவராக போற்றப்படுகிறார். மேலும், இந்நோய் தொற்றினால்‌ பாதிக்கப்பட்டு தாய்‌ அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குட்பட்ட 13,682 குழந்தைகளின்‌ பெற்றோர்களுக்கு தலா ரூ.3 லட்சம்‌ வீதம்‌ 410.46 கோடி ரூபாயையும் மற்றும் இலங்கை தமிழ் ‌அகதிகளின்‌ 9 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.27 லட்சமும் கூடுதலாக ரூ.410.73 கோடி நிவாரண உதவித் ‌ தொகை வழங்கப்பட்டுள்ளது.


கொரேனா நோய் தொற்றினால்‌ பாதிக்கப்பட்டு, பெற்றோர்‌ இருவரையும்‌ இழந்து உறவினர்‌ அல்லது பாதுகாவலரின்‌ அரவணைப்பில்‌ வளர்ந்து வரும்‌ 365 குழந்தைகளுக்கு மாத பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.3,000 வீதம்‌ ரூ.2 கோடியே 35 லட்சம்‌ வழங்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளின்‌ ஒட்டுமொத்த நல்வாழ்வினை மேம்படுத்தும்‌ நோக்கில்‌ “தமிழ்நாடு மாநில குழந்தைகள்‌ பாதுகாப்புக்‌ கொள்கை 2021” வெளியிட்டுக் குழந்தைகள் நலனை பாதுகாப்பதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

விடியல் பேருந்து திட்டம்: விடியல் பயணத் திட்டத்தில் நாளது வரையில் 6661.47 கோடி ரூபாய் செலவில் மகளிரும் மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் ஏறத்தாழ 473.61 கோடி முறை பயண நடைகளும், திருநங்கைகள் 28.62 லட்சம் பயண நடைகளும், மாற்றுத்திறனாளிகள் 3.78 கோடி பயண நடைகளும் மேற்கொண்டு மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

புதுமைப் பெண் திட்டம்: கடந்த ஆகஸ்ட் திங்கள் 2022ல் தொடங்கப்பட்ட “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி புதுமைப் பெண் திட்டத்தின்” வாயிலாக, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வரை பயின்று தடையில்லாமல் உயர்கல்வியை தொடர மாதந்தோறும் ரூ1,000 நிதியுதவி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு 2.73 லட்சம் மாணவியர்கள் பயனடைந்துள்ளார்கள்.

சத்துணவுத் திட்ட மகளிர் மேம்பாடு: சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்க்கான ஓய்வு வயதினை 58லிருந்து 60 ஆக உயர்த்தி, அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
பணிபுரியும் மகளிருக்கு “தோழி விடுதிகள்: தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி நிறுவனம் மூலம், திருச்சி, கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் 688 பணிபுரியும் மகளிர் பயன் பெறும் வகையில் ரூ31.07 கோடியில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் தமிழ்நாடு கட்டப்பட்டு இவ்விடுதிகளில் 259 பணிபுரியும் மகளிர் பயனடைந்து வருகின்றனர்.


பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்: பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ.219 கோடி செலவில் 87,501 குழந்தைகள் பயனடைந்தனர். 2021-22 ஆண்டில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 18 வயது நிரம்பிய 1,43,908 குழந்தைகளுக்கு ரூ.341.30 கோடி முதிர்வுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

திருமண நிதியுதவி திட்டத்தில் சாதனை: மகளிர் திருமண நிதியுதவி திட்டங்களின்கீழ், 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 637 மகளிர்க்கு 1,047 கோடி ரூபாய் திருமண நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் நலன்: 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1,000 முதல்வர் மு.க.ஸ்டாலினால் 2023 மார்ச் முதல் ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ரூ.2.36 கோடி நிதி ஒதுக்கீட்டில் 1482 திருநங்கைகள் பயனடைந்து வருகின்றனர்.

இதுபோன்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையில் உருவான பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு மகளிர் நலம் காக்கப்பட்டு வருவதை பெண்கள் உள்ளிட்ட அனைவரும் மனதாரப் பாராட்டி தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.

Trending News

Latest News

You May Like