முக்கிய அறிவிப்பு..! குடும்ப தலைவியாக இல்லாத பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?
ஜூலை 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் சிறப்பு முகாம்களில் இதுவரை இந்த திட்டத்தில் பயன்பெறாத பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவி இல்லை என்றால் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வீட்டில் அப்பா, இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். யாருக்கும் திருமணம் ஆகவில்லை, அம்மா உயிரோடு இல்லை என்றால், வீட்டில் உள்ள 21 வயது நிரம்பிய மூத்த பெண்ணுக்கு பணம் வழங்கப்படும். அவர் குடும்பத் தலைவி இல்லையென்றாலும், மகளிர் உரிமைத் தொகை மூலம் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவர்கள் தகுதியானவராக இருந்தால், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம், ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவாகரத்து பெற்றவர்கள் தனி ரேஷன் கார்டு வைத்திருந்தால், அவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கண்டிப்பாக கிடைக்கும்.
ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், கடந்த சில மாதங்களில் திருமணம் ஆகி குடும்பத் தலைவியான பெண்கள், ரூ.1000 உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஒரே வீட்டில் இரண்டு பெண்கள் இருந்தால், அவர்கள் இருவருமே ரூ.1000 உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வகுத்துள்ள விதிகளைப் பார்ப்போம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதால், பலரும் தங்கள் ரேஷன் கார்டுகளில் தேவையான மாற்றங்களைச் செய்யத் தொடங்கி உள்ளனர். ஒரு வீட்டில் பாட்டி ஒருவர் பென்ஷன் பெற்று வந்தால், வீட்டில் உள்ள மருமகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் சிலருக்கு ஏற்படலாம். இதன் காரணமாக, பலர் தங்கள் வீடுகளில் உள்ள பாட்டிகளின் பெயர்களை ரேஷன் கார்டிலிருந்து நீக்கத் தொடங்கி உள்ளனர். ஆனால், ஒரு வீட்டில் எத்தனை பெண்கள் அரசின் பென்ஷன் வாங்கினாலும், ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவி என யார் பெயர் உள்ளதோ, அவருக்கே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். குடும்பத் தலைவியாக இருப்பவர் பென்ஷன் பெறக்கூடாது. அதேபோல், அவருடைய கணவர் அரசு ஊழியராக இருக்கக் கூடாது. மற்றபடி, ஒரே வீட்டில் பல பெண்கள் இருந்தாலும், அவர்கள் பென்ஷன் பெற்றாலும், குடும்பத் தலைவி என்ற பெயரில் உள்ள பெண்ணுக்கு இந்தத் தொகை வழங்கப்படும்.
கடந்த முறை விரிவாக்கத்தின்போது, புதிதாக ரேஷன் கார்டு வாங்கிய பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ரூ.1000 பணம் பெறுவதற்காகவே இவர்கள் புதிதாக ரேஷன் கார்டு பெறுகிறார்கள் என்று காரணம் கூறி, அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனால், இந்த முறை புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.