1. Home
  2. தமிழ்நாடு

கலைஞர் கனவு இல்லம் - தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

1

கலைஞர் கனவு இல்லம்  திட்டத்தின் கீழ் இப்போது புதிதாக ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதுவரை 38 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், 60 ஆயிரம் வீடுகள் கட்டுமான நிலையில் இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 8 லட்சம் வீடுகள் கட்ட வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு புதிய வீடுகள் கட்ட அனுமதி கொடுக்கப்படுகின்றன. இதுதவிர கழிப்பறை இல்லாத  வீடுகளுக்கும் புதிய கழிப்பறை கட்டுவதற்கு 12 ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு கொடுக்கிறது.

எனவே கழிப்பறை இல்லாத வீட்டினர் அருகில் உள்ள ஊராட்சி மன்றங்களுக்கு சென்று இந்த திட்டம் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டு முறையாக விண்ணப்பிக்கவும். இப்போது கலைஞர் கனவு இல்ல திட்டத்துக்கான தகுதிகள் என்ன?, அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே பார்க்கலாம்.

கலைஞர் கனவு இல்ல வீட்டுக்கான விதிமுறைகள், தகுதிகள் : 

* குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்

* பட்டா அல்லது வீடு அமைந்துள்ள இடத்திற்கான உரிமை ஆவணம் உள்ள குடும்பங்கள் மட்டுமே இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவர். தற்போது குடிசை அமைந்துள்ள இடத்தில் அல்லது அவர்களுக்கான பட்டா, உரிமை ஆவணம் உள்ள இடத்தில் வீடுகள் கட்டப்பட வேண்டும்.

* பரம்பரை சொத்தில் குடிசை வீட்டில் இருப்பவர்கள், வீட்டுமனை வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தில் வீடு கட்டலாம்.

* புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள குடிசைகளுக்கு "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின்கீழ் நிரந்தர வீடுகள் வழங்கப்பட மாட்டாது. குடிசை அமைந்துள்ள இடம் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் எனில், அந்த ஆக்கிரமிப்பு வருவாய் துறையால் வரன்முறை செய்யப்பட்டிருந்தால் வீடு வழங்க பரிசீலிக்கப்படும்.

* பட்டா இல்லாத குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்ட பின்னரே, வரும் ஆண்டுகளில் வீடுகள் வழங்க பரிசீலிக்கப்பட வேண்டும். வீட்டு
மனைப்பட்டா குறித்து மாவட்டம்/வட்டாரம்/ஊராட்சி தலைவர் ஆகியோரிடம் முறையிட்டு பெற்றுக் கொள்ளவும்

* ஓலை வேயப்பட்ட தகுதியான அனைத்து குடிசைகளும் பயன்பெறும் வரை அவற்றிற்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசீலித்து வீடுகள் வழங்கப்பட வேண்டும்.

* தகுதிவாய்ந்த அனைத்து குடிசைகளுக்கும் வீடுகள் வழங்கப்பட்ட பின்னர். ஓலைகளால் சுவர்கள் அமைக்கப்பட்டு, அதன்மீது தார்பாலின் ஷீட் /அஸ்பெஸ்டாஸ் ஓடு/ உலோக தகடு / ஓடு ஆகியவற்றை கொண்டு மேற்கூரை அமைக்கப்பட்ட வீடுகள் இந்த திட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படும்

* பயனாளிகளின் பட்டியலைத் தயாரிக்கும் போது, மனநலம் குன்றிய நபரைக் கொண்ட குடும்பம், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பெண் தலைமையிலான குடும்பங்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், திருநங்கைகள், எய்ட்ஸ்/காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சம்பந்தப்பட்ட துணை இயக்குநரால் (சுகாதாரம்) சான்றளிக்கப்பட்டவர்கள் மற்றும் தீ, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற சிறப்பு பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

* வேறு இடத்தில் நிரந்தர வீட்டில் வசிப்பவர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்படமாட்டாது.

எனவே, இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளவர்கள் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் பயன்பெற விரும்பினால் ஊராட்சி அலுவலகங்களுக்கு சென்று கூடுதல் விளக்கங்களை பெற்று, புதிய வீடு கட்ட விண்ணப்பிக்கவும்.

Trending News

Latest News

You May Like