மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு : மீன்பிடி தடை காலம் தொடங்கும் தேதி அறிவிப்பு..!

தமிழகத்தில் ஆண்டுதோறும் அமலாகும் மீன்பிடித் தடைக் காலம் இந்த ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் நடைபெறுகிறது. இந்த காலத்தில் விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.
மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி இடையிலான கடற் பகுதிகளில் மீன்கள் மற்றும் பிற கடல் வாழ் உயிரினங்களின் இனப் பெருக்கம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதிகமாகக் காணப்படும். இதனால் இந்த காலத்தில் மீன்பிடி தடை அமல்படுத்தப்படுகிறது.
இந்தத் தடையைத் தொடர்ந்து, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம், 1983-ன் கீழ், 2025-ஆம் ஆண்டுக்கான மீன் பிடித் தடைக் காலம் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் பயன்படுத்தி கடலுக்குள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடரபாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தடைக் காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி, எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தளங்களில் நிறுத்தி வைக்கப்படும்.
தடைக்கால நிவாரணம்
மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த தடைக் காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 33,000 மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.8,000 நிவாரணத் தொகையாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.