1. Home
  2. தமிழ்நாடு

தேமுதிக தொண்டர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! தமிழகம் முழுவதும் நாளை...

1

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி காலமானார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அன்று முதல் தினமும் விஜயகாந்த் சமாதியில் தே.மு.தி.க.வினரும், பொது மக்களும் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்

'தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உயிரிலும் மேலான என் அன்பு கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் முதற் கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி 12ஆம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 24 ஆம் ஆண்டு கொடி நாள் நமது தலைவர் கேப்டன் இல்லாத முதல் கொடிநாள். ஒட்டுமொத்த கழக நிர்வாகிகளுக்கும், கழக தொண்டர்களுக்கும் கேப்டனின் மறைவு மிகப் பெரிய வேதனையையும், மீளா துயரத்தையும் கொடுத்திருக்கிறது.

கேப்டன் நமது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி கடந்த 2000ஆம் ஆண்டு நமக்காக மூவர்ண கொடியை அறிமுகப்படுத்தினார். மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கிய பின் அதை கழக கொடியாக மாற்றி அந்த கொடிநாளை தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் விழாவாகவே கொண்டாடிக்கொண்டிருந்தோம். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மூவர்ண கொடியின் வர்ணங்கள் மூலம் நமது கழகத்தின் கொள்கைகளை, சனாதனம். சமதர்மம், சமூகநீதி, சமசிந்தனையை பறைசாற்றுகின்ற ஒரு கொடியாகவே நமக்கு அளித்தார்.

ஜாதி, மத, மொழி வேறுபடு இல்லாமல், அனைவருக்கும் இலவச சமச்சீர் கல்வி, தாமான மருத்துவம், வறுமை கோட்டிற்கு கீழ் மக்கள் இல்லாத நிலை, வளமான தமிழகத்தை நமது புரட்சி தீபம் மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை தந்து, அனைவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், விவசாயம், படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, லஞ்சம், ஊழல் இல்லாதா நேர்மையான வெளிப்படையான ஆட்சி போன்ற எண்ணற்ற புரட்சிகராமான கொள்கைகளையும் கொடி அறிமுகப்படுத்திய அன்றே நமக்கு உறுதிசெய்திருக்கிறார்.

அனைத்து மாவட்டம், பகுதி, நகரம் ஒன்றியம், பேரூர், ஊராட்சி கிளைகள், அனைத்து கிராமப்புற கிளை கழக பகுதிகளில் பழைய கொடிகளை அகற்றிப், புதுக்கொடிகளை ஏற்றி, கழக கொடிகள் இல்லாத இடத்தில் புதுக் கொடிகளை அமைத்து அந்த இடத்தில் தலைவர் கேப்டன் அவர்களுடைய புகைப்படத்தை வைத்து கேப்டனுக்கு நினைவேந்தல் புகழஞ்சலியுடன் இந்த ஆண்டு கொடியை தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஏற்றிட வேண்டும்.

தலைவர் கேப்டன் அவர்களின் கோட்பாடு படி இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே என்ற அடிப்படையில் நம்மால் முடிந்த உதவிகளை மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மற்றும் முதியவர்களுக்கு உதவிகளை செய்யவேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழக முழுவதும் அனைத்து இடங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கையை அசுர வேகத்தில் நடத்தி, அதிகமான உறுப்பினர்களை நமது கொடி நாளில் முகாம்கள் அமைத்து பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்து, அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியாக நமது கழகத்தை வளர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை ஆகும்.
 

கேப்டன் புகழ் ஓங்கவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புகழ் நிலைத்து நிற்கவும் நாம் அனைவரும் இந்த நாளிலே சூளுரை ஏற்று, நமது கழகக் கொடி தமிழகம் எங்கும் பட்டொளி வீசி பறக்க வைத்து, நமது முரசு எட்டுத்திக்கும் வெற்றி முரசாக கொட்ட நாம் அனைவருமே உறுதிமொழி ஏற்போம் என தேமுதிக கொடிநாளில் கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!! நன்றி! வணக்கம்.''

Trending News

Latest News

You May Like