1. Home
  2. தமிழ்நாடு

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

1

சென்னை, திருவள்ளூர், கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மைசூர் - தர்பங்கா (12578) எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. லோகோ பைலட் சிக்னல் வழங்கிய பிறகே கிளம்பியதாக கூறப்படுகிறது. எனவே தவறான சிக்னல் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் மற்றும் சரக்கு ரயில் சில பெட்டிகள் தடம்புரண்டு, பற்றி எரிந்தது. தற்போதுவரை சுமார் 13 பெட்டிகளில் தீப்பற்றியிருப்பது தெரியவந்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 ஏசி பெட்டிகளில் தீப்பற்றியுள்ளது. இந்த சம்பவத்தால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த ரயிலில் 1,400 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், 19 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அரக்கோணம் பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் இருந்து ஏராளமான ஆம்புலஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. காவல்துறை, தீயணைப்புத்துறை, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த விபத்து காரணமாக , அந்த வழித்தடங்களில் பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போதுவரை உயிரிழப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் மீட்புப் பணிகள் முடிந்த பிறகே முழு விபரம் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் நாசர், தலைமை செயலாளர் முருகானந்தம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட உயரதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மருத்துவ குழுவும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். பொதுவாக இதுபோன்ற விபத்துகளில் உள்ளூர் மக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த ரயில் விபத்து காரணமாக அந்த வழித்தடங்களில் செல்லும் ரயில்கள் வேறு வழிகளில் செல்லவுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில் எண் 13351 தான்பாத் - ஆலப்புழா ரயில் தான்பாத்தில் இருந்து நேற்று காலை 11.35 கிளம்பியது. இந்த ரயில் சென்டிரல், அரக்கோணம், நாயுடுப்பேட்டை, சூலூர் பேட்டை ஆகிய வழித்தடங்களைத் தவிர்த்துவிட்டு ஆலப்புழா செல்லவுள்ளது. அந்த வகையில், ரேணிகுன்டா, மேலப்பாளையம், காட்பாடி வழியாக ஆலப்புழாவை சென்றடையவுள்ளது.

அதேபோல, ரயில் எண் 02122 ஜபல்பூரில் இருந்து நேற்று மாலை 4.25 மணிக்கு புறப்பட்ட ஜபல்பூர் - மதுரை சூப்பார் ஃபாஸ்ட் ஸ்பெஷல் ரயில் சென்னை எக்மோர் மற்றும் தாம்பரம் வழித்தடங்களை தவிர்த்துவிட்டு ரேனிகுன்டா, மேலப்பாளையம், செங்கல்பட்டு வழியாக மதுரைக்குச் செல்லவுள்ளது என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like