அக்.1 முதல் "ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்" அமல்

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகம் முழுவதும் அக்.1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நேற்று நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில், முதல்வர் தலைமையில், நேற்று நடந்தது. துணை முதல்வர், அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், ராஜு, ஜெயகுமார், அன்பழகன், காமராஜ் மற்றும் தலைமைச் செயலர் சண்முகம், உணவுத் துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
'ஒரே நாடு; ஒரே ரேஷன்' திட்டத்தை செயல்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகள் விளக்கினர். எவ்வித புகாரும் வராத வகையில், திட்டத்தை செயலாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார்.
மக்கள் நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் அமல்படுத்துவதாக இருந்தது. ஆனால்,கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், இத்திட்டம் செயல்படுத்துவது தள்ளி சென்றுகொண்டே சென்றது.இந்நிலையில், வரும் அக்.1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in