1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் டிரோன்கள் பறக்கவிட்டால் உடனடி கைது..!

1

பிரதமர் நரேந்திர மோடி நாளை  சென்னை, பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ள ‘கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2023’ விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க வருகை தருகிறார். அவரது சென்னை வருகையையொட்டி சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் இன்று  நடைபெற்றது.  

இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி சென்னை  காவல் ஆணையாளர் தலைமையில், சென்னையில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின்  நிகழ்ச்சிகள் நடைபெறும் சென்னை பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை விமான நிலையம், கிண்டி ஆளுநர் மாளிகை, மற்றும் அடையாறு கடற்படை தளம் ஆகிய இடங்களிலும், அதன் சுற்றுப்புறங் களிலும், பிரதமர் செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சென்னையில் உள்ள  தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவும்  தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைதுசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like