நான் ஆடு என்று யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, அப்போது ஆட்டுக்குட்டி என்றால்..

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புதுக்கோட்டை மார்த்தாண்டபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, “நேற்று முன்தினம் அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்கு சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர், ஜல்ஜீவன் திட்ட அமைச்சரையும் சந்திந்து பேசியுள்ளார். ஒன்றிய அமைச்சர் இந்த விவகாரத்தில் நியாயமான முடிவை எடுப்பார் என நம்புகிறோம். எங்களது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ள கருத்து தவறானது, எடப்பாடி எப்போது உண்மை பேசி இருக்கிறார்?
நான் ஆடு என்று யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, அப்போது ஆட்டுக்குட்டி என்றால் நான் தான் என்பதை அண்ணாமலை ஒத்துக்கொள்கிறாரா..? நான் உதைப்பேன் என்று யாரையும் சொல்லவில்லை, அண்ணாமலை கை அரிவாள் பிடித்த கை என்றால், என் கை பேனா பிடித்த கை, எங்களுக்கு எழுத மட்டுமே தெரியும். நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடந்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் தான் வழக்கு தொடர்ந்தேன். அதன்பின் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தோம், தற்போது எடப்பாடி விருப்பபடி தமிழ்நாடு காவல்துறையே இந்த வழக்கை விசாரிக்கட்டும் என்று கூறினேன். எடப்பாடி மேல் உள்ள வழக்கை நான் வாபஸ் வாங்கவில்லை.
ஆளுநர் பொய் சொல்லி உள்ளார் என்பதற்கு ஆளுநர் மாளிகையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கையொப்பமிட்டு ஆளுநர் மாளிகையில் கோப்புகள் வாங்கப்பட்டதற்கான ஆதாரம் வெளியாகி உள்ளது. பொய் சொல்லி மாட்டிக்கொண்டுள்ளார். அதிலிருந்து எப்படி தப்பித்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆளுநர் டெல்லி சென்றுள்ளாரா? அல்லது டெல்லி தலைமை அவரை கண்டிப்பதற்காக வரச்சொல்லி இருக்கிறார்களா? அவர் டெல்லியிலிருந்து ஆளுநராகவே வருவாரா? அல்லது வெறுமனே வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். டிஐஜி விஜயகுமார் தற்கொலை வழக்கில் தற்பொழுது முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கிடையில் இதை அரசியல் ஆக்க கூடாது.
ஜெயலலிதா டான்சி வழக்கில் நிலத்தை எப்படி ஒப்படைத்தாரோ அதேபோல் செந்தில் பாலாஜி தான் வாங்கிய பணத்தை திருப்பி அளித்துவிட்டார். ஜெயலலிதா வழியை அவரும் பின்பற்றியுள்ளார். இந்த சம்பவம் நடந்தது எல்லாமே அதிமுக ஆட்சிக்கு காலகட்டத்தில்தான். எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. மோடி வந்ததற்கு பிறகு சிபிஐ, ஐடி, ஈடி உள்ளிட்ட மூன்று துறைகளும் எதிர்க்கட்சியை பழிவாங்க பயன்படுத்தப்படுகிறது. செயலற்று கிடக்கிறது.
திமுக கூட்டணியை உடைக்க முடியாது? இது திடீரென்று உருவான கூட்டணி கிடையாது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து அடுத்தடுத்து வந்த 4 தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணியாக உள்ளது. தொடர்ந்து ஒரு கூட்டணி அடுத்தடுத்து நடந்த 4 தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு கிடையாது. அந்த வரலாற்று சாதனையை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் படைத்துள்ளார்.. பாஜக 25 இடங்களுக்கு மேல் நாடாளுமன்ற தொகுதியில் கைப்பற்றும் என்பது அவர்களது நல்ல கனவு தான்” என்று தெரிவித்தார்.