நான் முதல்ல ஒரு மருத்துவர் அப்புறம் தான் அரசியல்வாதி... வலிப்பு நோயால் துடித்தவருக்கு முதலுதவி செய்த தமிழிசை..!
சென்னை தி நகரில் தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.
பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக்,மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மேலிட இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்களான எச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு தமிழிசை சவுந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்தார். அப்போது பாஜக நிர்வாகி ஒருவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. அவர் பாஜக அலுவலகத்தின் தரையில் விழுந்து துடிதுடித்தார்.
இதைக் கவனித்த தமிழிசை சவுந்தரராஜன் விரைவாக ஓடி வந்து வலிப்பு ஏற்பட்ட நிர்வாகிக்கு முதலுதவி செய்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி செய்தார்.
இதற்கிடையே பாஜக நிர்வாகிக்கு தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி அளித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. தமிழிசை சவுந்தரராஜனின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவின் முன்னாள் தலைவர், முன்னாள் ஆளுநராக பொறுப்பு வகித்தவராக இருந்தாலும் கூட அவர் அடிப்படையில் ஒரு டாக்டர் ஆவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.