1. Home
  2. தமிழ்நாடு

நம்ம கோவையில் இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி..! எங்கே..? எப்போ தெரியுமா ?

1

இசைஞானி இளையராஜா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேரடி இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக கோவையில் வருகிற மே மாதம் 18 ஆம் தேதி பீளமேடு கொடிசியா மைதானத்தில் இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அதற்கான டிக்கெட் அறிமுக நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அப்போது பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மௌன ராகம் முரளி, மே மாதம் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் கோவை கொடிசியா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தொடர்ந்து 4 மணி நேரம் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை பார்வையாளர்களாக வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அதற்காக கொடிசியா மைதானத்தில் ஏழு கேலரிகள் அமைக்கப்பட்டு 7 நுழைவாயில்கள் இருக்கும் எனவும் 700 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வளர்களை கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய இருப்பதாகவும் இன்று முதலே டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளதாகவும் கூறியதுடன் கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் டிக்கெட்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை கட்டணத்தில் டிக்கெட் வழங்க இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதே போல் கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக இருந்த செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு இலவச அனுமதி வழங்கி அவர்களுக்கென தனி கேலரி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

வழக்கமாக இசைஞானி இளையராஜாவின் குழுவில் உள்ள பாடகர்களான எஸ்பிபி சரண், ஷைலஜா உட்பட 25 க்கும் மேற்பட்ட பின்னணி பாடகர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாட இருப்பதாகவும் பங்கேற்கும் பார்வையாளர்கள் அனைவரும் இருக்கையில் மட்டுமே அமர்ந்து பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறிய அவர், திட்டமிட்டபடி 20 ஆயிரம் டிக்கெட்டுகளுக்கு மேல் அச்சிடுவதற்கான திட்டம் இல்லை எனவும் தெரிவித்தார்.
 

இதை தொடர்ந்து இந்த அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற நிகழ்ச்சியின் முக்கிய பங்களிப்பாளரான தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்து செங்கட்ராம், கோவையில் இசைஞானி இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறுவது கோவை மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் எனவும் கோவையில் உள்ள தங்கள் அமைப்பு சார்ந்த தங்க நகை விற்பனை மையங்களில் நகை வாங்குவோருக்கு இலவசமாக ஒரு டிக்கெட் தந்து தங்களது சார்பில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேருக்கு மேல் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்போம் என்றார்.

Trending News

Latest News

You May Like