1. Home
  2. தமிழ்நாடு

இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்..!

1

இளையராஜாவின் மகள் பவதாரிணி (வயது 47)உடல்நலக்குறைவால் காலமானார். இளையராஜாவின் மகளான பவதாரிணி நேற்று மாலை 5.30 மணியளவில் காலமானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். பாரதி படத்தில் மயில் போல, ராமர் அப்துல்லா படத்தில் என்வீட்டு ஜன்னல் உள்ளிட்ட பல பாடங்களை பாடியுள்ளார். பாரதி திரைப்படத்தில் 'மயில் போல' பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

47 வயதான இளையராஜாவின் மகள் பவதாரணிக்கு கடந்த சில மாதங்களாகவே உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. புற்றுநோய் பாதிக்கப்பட்ட இவர் இயற்கை மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருக்கிறார்.

சிகிச்சைக்காக இலங்கை சென்று இருந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணி அளவில் காலமானார். இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 2000த்தில் இசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாரதி திரைப்படத்தில் இவர் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் பவதாரிணி வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, கடந்த 2002-ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரண்ட்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். தொடர்ந்து, ‘பிர் மிலேங்கே’ (இந்தி), ‘அமிர்தம்’, ‘இலக்கணம்’, ‘மாயநதி’ படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.20 மணி அளவில் இலங்கையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னை கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாரதிராஜா இரங்கல்: “என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு, எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்” என தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: "பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி , தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களுக்குப் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்.தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும், பவதாரணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்: “சிறந்த பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜா அவர்களது புதல்வியுமான பவதாரணி, உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தனது தனிச் சிறப்பான குரலால், இதயத்தை நெகிழச் செய்யும் பல பாடல்களைப் பாடியவர் பவதாரணி. இளம் வயதிலேயே தேசிய விருது வென்ற பவதாரணி அவர்கள் இசையுலகில் பல சாதனைகள் படைப்பார் என்று அனைவரும் விரும்பியிருந்த போது, அவரது எதிர்பாராத மறைவு சற்றும் ஏற்க முடியாததாக இருக்கிறது. பவதாரணி அவர்களைப் பிரிந்து வாடும் இசைஞானி இளையராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு இறைவன் துணையிருக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like