நாடு திரும்பினார் இளையராஜா: தமிழக அரசு சார்பில் வரவேற்பு..!

தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த இசைஅமைப்பாளர் இளைய ராஜா, 1,000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 15,000க்கும் அதிகமான பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா, 81, இயற்றிய மேற்கத்திய கிளாசிக்கல் இசை தொகுப்பான, 'வேலியன்ட்' சிம்பொனியை, லண்டனில் நேற்று அரங்கேற்றினார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 10) சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வந்தடைந்தார். இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு அளித்தார். விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் இளையராஜா கூறியதாவது: அனைவருக்கும் நன்றி. மிகவும் நன்றி.
இறைவன் அருள்
மிகவும் மகிழ்வான இதயத்தோடு, மலர்ந்த முகத்தோடு, நீங்கள் என்னை வழி அனுப்பி வைத்ததே இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள் புரிந்தான். இது சாதாரண விஷயம் அல்ல. மியூசிக் எழுதலாம். மியூசிக் எழுதி கொடுத்தால் அவர்கள் வாசிக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி வாசித்தால் மியூசிக் எப்படி இருக்கும். இப்படி நாம் எல்லோரும் பேசுற மாதிரி ஒருத்தருக்கும் புரியாத மாதிரி இருக்கும்.
சிம்பொனியை அரங்கேற்றம் போது எந்த விதி மீறலும் இல்லாமல் சிறப்பாக நடந்தது. சிம்பொனி நான்கு பகுதிகளை கொண்டது. சிம்பொனி நான்கு பகுதிகள் முடியும் வரை யாரும் கைதட்ட மாட்டார்கள். கைதட்ட கூடாது என்பது தான் விதிமுறை. ஆனால் நமது ரசிகர்களும் அங்கு வந்திருந்த பொதுமக்களும், ஒவ்வொரு பகுதி முடியவும் கைதட்டினார்கள்.
சிம்பொனி ரசித்தவர்கள் கை தட்டல் மூலம் பாராட்டை தெரிவித்தனர். இந்த சிம்பொனி எல்லா இசை வல்லுநர்களாலும் பாராட்டுகளை பெற்றது. முதல்வரின் அரசு மரியாதை என்னை நெகிழ வைக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் என்னை வாழ்த்தி கொண்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஆரம்பம் தான். இன்னும் 13 நாடுகளில் சிம்பொனி அரங்கேற்றப்பட உள்ளது.
என்னை தெய்வமாக கொண்டாடுபவர்கள் இருக்கிறார்கள். என்னை கடவுள், இசைக்கடவுள் என்கிறார்கள். எப்படி இருந்தாலும் நான் சாதாரண மனிதனை போல தான் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். என்னை இசைக்கடவுள் என்று சொல்லும் போது எனக்கு எந்த எண்ணம் தோன்றும் என்றால், இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிவிட்டீர்கள் என்று தான் தோன்றும். உங்கள் மலர்ந்த முகம் என்னை வரவேற்பது மிகவும் நன்றி.