நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள் : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா..!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பிரசித்தி பெற்றது. மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் ஆண்டாள் கோவிலில் இன்று காலை திவ்ய பாசுரம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி, நாட்டியஞ்சலி நடைபெற்றது. இதில் இசைஞானி இளையராஜா இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவரை அர்த்த மண்டபத்துக்கு அனுமதிக்கவில்லை என்று சர்ச்சை பரவியது. மேலும் அர்த்த மண்டபமும் கருவறை போன்றது என்றும், இளையராஜா தவறுதலாக நுழைந்ததால் உடனே கோவில் நிர்வாகம் அவரிடம் எடுத்து கூறியது என்றும், இதன் பிறகு அவரே வெளியில் நின்று தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது.
கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த செயல் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய 'எக்ஸ்' பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் 'என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக் கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.