கோவை மாநகராட்சியுடன் களத்தில் இறங்கியது IIT சென்னை..!
சிறுவாணி அணை கோவையில் உள்ள 100 வார்டுகளில் 22 வார்டுகளுக்கும், இதை தவிர 28 கிராமங்களுக்கும் 7 டவுன் பஞ்சாயத்துகளுக்கும் தேவையான குடிநீர் ஆதாரமாக உள்ளது.
இந்த அணையில் ஏற்படும் நீர் கசிவால் தினமும் பெருமளவில் நீர் அணையிலிருந்து வீணாவதாக தமிழக குடிநீர் வடிகால் வாரிய துறை அதிகாரிகள் கோவை மாநகராட்சிக்கு கடிதம் மூலம் அண்மையில் தெரிவித்தனர். அணையின் அனுமதிக்கப்பட்ட நீர்த்தேக்க அளவை (45 அடி) எட்டமுடியாமல் இருப்பதற்கு இப்படி நீர் கசிவு ஏற்படுவதும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது. இதை வேகமாக சரிசெய்ய வேண்டியது மிக அவசியமாகிறது.
இந்த நிலையில் அணையை ஆய்வு செய்து, அதில் என்னென்ன சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவேண்டும் என்பது பற்றி அறிய மஹாராஷ்டிராவில் உள்ள மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையத்தின் (CWPRS) உதவியை கோவை மாநகராட்சி நாடியுள்ளது.
இன்று கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையத்தின் நிபுணர் குழு, சென்னை IIT குழுவினர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குழுவினர், கோயம்புத்தூர் மாநகராட்சி குழுவினர் மற்றும் கேரள நீர்வளத்துறையினர் ஆகிய ஐந்து குழுவினர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சியின் குடிநீர் நீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவென்றால்: இன்று நடைபெற்ற ஆய்வின்போது, சிறுவாணி அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து கேரள நீர் பாசனத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். சிறுவாணி அணையின் சுரங்கப் பகுதியினை (Tunnel) நீர் வள ஆராய்ச்சி குழுவினருடன் ஆய்வு செய்ததில், நீர் கசிவு அளவு குறித்து கண்டறியப்பட்டு, அதனை சரி செய்வது குறித்தும் குழுவினருடன் விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.