1. Home
  2. தமிழ்நாடு

வென்றால் வேலூர் கோட்டை. இல்லை என்றால் டெல்லி செங்கோட்டை..!

1

நடிகர் மன்சூர் அலிகான் தனக்கு ஆதரவாக வேலூரில் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்தார். அங்கு கடைகளில் சென்று அமர்ந்து குழந்தைகளை கொஞ்சியும் மக்களிடையே தமக்கு ஆதரவு திரட்டினார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம், படுத்தால் பந்த். எப்போது வேலூரில் இறங்கினேனோ அப்போதே பிரச்சாரம் ஆரம்பித்து விட்டேன். கட்சியின் பொதுச் செயலாளர் உங்களை நீக்கியதாக கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, பாலமுருகன் என்பவர் தான் பொதுச்செயலாளர் என்னை நீக்கியவர் கிடையாது. காசு வாங்கிக்கொண்டு ஏதோ பண்ணி என்னை நீக்கியதாக அறிவித்துள்ளார்.

விஜயலட்சுமிக்கு சீமான் கொடுத்தது போல் எனக்கு விட்டுள்ளார்கள். ஏதோ காசுக்காக பண்ணுகிறார்கள். இது நான் ஆரம்பித்த கட்சி. இது இந்தியா முழுக்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். எலக்சன் கமிஷன் அப்ரூவலில் பாலமுருகன் என போட்டு உள்ளது. அதை ஏன் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். மன்னிக்க முடியாத குற்றம். அதைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. என் கடமை பணி செய்து கிடப்பதே. எல்லாவற்றையும் ரெக்கார்ட் பண்ணி வைத்திருப்பது அவர்களின் வேறு நோக்கம் புரிகிறது. இந்த தொகுதியில் 10 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளதாக கேள்விப்பட்டேன். ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் அவர்களுக்கு வேலை கொடுக்க முடியும்.

அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை குறித்த கேள்விக்கு, போய் பேசி விட்டு வந்தேன். அதுகுறித்து இன்னும் ஏதும் தகவல் இல்லை. நான் இங்கே நிற்கிறேன். கொடுத்தால் இரட்டை இலை. இல்லை என்றால் வாழை இலை. வாழை இலை போட்டு உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதான். வாழை இலை உடம்புக்கு நல்லது. இரட்டை இலையும் உடம்புக்கு நல்லது. கறிவேப்பிலையாக மாறிவிடக்கூடாது. இதில் அவர்களை குறை சொல்லக்கூடாது. அது அம்மாவோட கட்சி தாய் கழகம். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு வேட்பு மனு ஏற்றுக் கொண்ட பின்பு என்னுடைய திப்பு சுல்தான் வாளை சுழற்றுவேன். இப்பவே வாளை சுழற்ற வைக்காதீர்கள். இது திப்புவின் வாள்.

ஐந்து தொகுதிகளில் போட்டியிடுவேன் என கூறியிருந்தது குறித்த கேள்விக்கு, அது இப்போது இயலாது. பொருளாதார வசதி இல்லை. கூட்டணி தருவார்கள் என்று பார்த்தேன் தரவில்லை. நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி ஏதும் பேசவில்லை. அவர் இறந்த பிறகு அதோடு சென்றுவிட்டது.

எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்க மாட்டார்கள், ஏனென்றால் ஈடி வந்துவிடும். அந்த பயம் நமக்கு இல்லை. ஒரே மக்கள் ஒரே நாடாக இந்தியா உள்ளதா? ஒரே தேர்தல் என்பது எப்படி சாத்தியம். டிஜிட்டல் இந்தியாவில் வாக்கு எண்ணிக்கையை ஊறவைத்து ஊறுகாய் போட்டு 45 நாட்களுக்குப் பிறகு முடிவை அறிவிப்பார்கள். இதுதான் உலகத்திலேயே இல்லாத டிஜிட்டல் இந்தியா. வந்தால் வென்றால் வேலூர் கோட்டை. இல்லை என்றால் டெல்லி செங்கோட்டை. ஒற்றை ஆளாக இருந்தாலும் உப்பாக இருப்பேன். ஒற்றை ஆளாக இருந்தாலும் ஒரப்பாக (காரம்) இருப்பேன். தத்திகள் மாதிரி நான் இருக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like