இன்று கருடனைக் கண்டால் மோட்சப் பேறு கிடைக்கும்..!
கருடனை வானில் தரிசிப்பதும், கருட வாகனத்தில் பெருமாளை தரிசிப்பதும் பிறவிப் பயனைத் தரும் என்பார்கள். காக்கும் கடவுளான திருமாலுக்கு அவர் மனவேகத்துக்கு தகுந்த விரைவான ஆற்றல் கொண்டவர் கருடாழ்வார். காரணம் திருமாலின் வாகனம் கருடன் என்றால் கருடரின் வாகனம் வாயு! திருமாலின் கொடியாக, வாகனமாக, காவலனாக, சாமர சேவை செய்யும் தொண்டனாக விளங்குபவர் கருடன். ஆடி மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் பஞ்சமி திதி நாள் கருட பஞ்சமி என்று போற்றப்படுகின்றது. இது கருடாழ்வாரின் பிறவித் திருநாள் என்றும், கருடனின் தாயான விநதையைக் காக்க இந்திரலோகத்தில் இருந்து அமிர்தத்தை கருடன் கொண்டு வந்த நாளே கருட பஞ்சமி என்றும் கூறப்படுகிறது.
கர்ம வினைகளும், தோஷங்களும் விலகும்; வாழ்க்கைச் செழிக்கும். மேலும் பக்தி, நினைவாற்றல், வேதாந்த அறிவு, வாக்கு சாதுர்யம் போன்றவையம் கிட்டும் என்கிறது ஈஸ்வர சம்ஹிதை. மனவியாதி, வாய்வு, இதய நோய், விஷ நோய்கள் தீரும்.
உடன் பிறந்த சகோதரர்களின் நலனுக்காகவும், பலமும் அதிர்ஷ்டமும் கொண்ட பிள்ளைகளைப் பெறவும் பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்து கருடனைப் போற்றுவார்கள். வழக்கமாக இந்நாள் அதிகாலை பூஜை கருட ஹோமத்துடன் திருமஞ்சனமும், இரவில் கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடைபெறும். அப்போது பெருமாளோடு, கருடாழ்வாரை தரிசிப்பது வைகுந்த பதவியை அளிக்கும் என்பார்கள். இந்நாளில் கருட மந்திரம் மற்றும் கருட பகவான் துதிப்பாடல்களைப் படிக்கும் அன்பர்களுக்கு மறுமையில், கருடாழ்வார் தான் தாங்கியிருக்கும் அமிர்தத்தில் இருந்து சிறிது வழங்குவார் என்பது பெரியோர்கள் நம்பிக்கை.
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பெண்கள்தான் அந்த வீட்டின் சக்தி. வீட்டு வழிபாடுகள் தொடங்கி சகல வேலைகளும் இல்லாள் இல்லாமல் முடிவடையாது. அப்படிப்பட்ட சக்திகளுக்குச் சகல சக்திகளையும் கொடுக்கக்கூடிய நாள் கருட பஞ்சமி. எனவே இந்த நாளில் கருடனை வழிபடுவதுடன், நாக வழிபாடும் செய்து வணங்குவதால் இரட்டிப்பு நன்மைகளை அடையலாம்.
ஆண் வாரிசு இல்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் கருடனைப் போல பலசாலியான, புத்திசாலியான, ஆண் வாரிசு கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம். பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது. அதிகாலை நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருடனை வழிபட்டு வர நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் வாகனம் வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், விஷத்தை முறித்தல், மருத்துவம் செய்தல், அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் எல்லாவித சுபகாரியங்களையும் செய்யலாம். சீமந்தம் செய்வதற்கு சிறந்த திதி பஞ்சமி திதியாகும். இந்த நாளில் மருந்துகள் சாப்பிட நோய்கள் விரைவில் மறையும் என்பது ஐதீகம்.
இந்த நாளில் கருடனைக் கண்டால் மோட்சப் பேறு கிடைக்கும். பெண்கள் மாங்கல்ய பலம் பெறுவார்கள். செவ்வாய் பலம் கூடும்; எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது ஆன்றோர் வாக்கு.