இனி பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தால் கைது..!
புதுக்கோட்டை மாவட்டம் மங்கல நாடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த எம். மதிமுருகன் தாக்கல் செய்த மனுவில்: "எங்களது கிராமத்தில் அருள்மிகு மங்கல நாயகி அம்மன் கோயில் உள்ளது. நான் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இக்கோயிலுக்குள் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்ய எனக்கு அனுமதி மறுக்கின்றனர்.
அதேபோல் இக்கோயில் திருவிழா உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் நான் மட்டுமன்றி பட்டியல் இன மக்களைக் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதித்துள்ளனர். எனவே பட்டியல் இன மக்கள் அக்கோயிலுக்குள் சென்று வழிபடவும், திருவிழாவில் பங்கேற்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்." இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து நீதிபதி பி.டி. ஆஷா பிறப்பித்த உத்தரவு: "சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பது தலைகுனிய வேண்டிய விஷயம். அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் செல்லவும், தரிசனம் செய்யவும் உரிமை உண்டு. இந்த வழக்கில் மனுதாரர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால், அவரையும், அவர் சார்ந்த சமுதாயத்தினரையும் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதி மறுத்துள்ளனர்.
பிறப்பால் ஒருவர் தங்களை உயர்ந்தவராகவும், மற்றவரை தாழ்ந்தவராகவும் நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது போன்ற தீண்டாமை செயலை, இந்த நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. கடந்த 2021-ல் புதுக்கோட்டை ஆட்சியர் உத்தரவின் பேரில் அனைத்து சமுதாயத்தினர் கலந்து கொண்ட சமாதான கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த விஷயத்தில் அதில் எடுக்கப்பட்ட முடிவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், கோயிலுக்குள் அனைத்து தரப்பினரும் சுவாமி தரிசனம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அறந்தாங்கி கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதேனும் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்யலாம்."
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.