இனி போனில் ஆர்டர் செய்தால்... வீடு தேடி வரும் கூட்டுறவு துறையின் 64 வகை பொருட்கள்..!
கூட்டுறவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் தரமான பொருட்களை நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யும் வகையில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மற்றும் தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள் ஆகியவற்றின் மூலமாக அவர்களது சில்லரை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தப் பொருட்களை எளிதில் சந்தைப்படுத்தவும், பொதுமக்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையிலும் தங்கள் இருப்பிடத்திலிருந்தே சுலபமாக பொருட்களை வாங்க ஏதுவாகவும் இந்த கூட்டுறவு கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று (ஜூலை 6) கூட்டுறவு சந்தை (CO-OP BAZAAR) கைப்பேசி செயலி தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
இந்த மொபைல் செயலியின் மூலம் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் 44 வகையான தரமான தயாரிப்புகள் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் 20 வகையான உயர்தர நுண்ணூட்டச் சத்துக்கள் என மொத்தம் 64 கலப்படமற்ற தரமான தயாரிப்புகளை வெளிச் சந்தையை விட குறைவான விலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவரவர் வீட்டிலிருந்து பெற்று பயனடையும் வகையில் இக்கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்திட பொதுவான கூட்டுறவுச் சந்தை (Coop - Bazaar) செயலியினை துவக்கி வைத்தார். #CMMKSTALIN #TNDIPR #CM_MKStalin_Secretariat@CMOTamilnadu @mkstalin@OfficeOfKRP pic.twitter.com/GP7LEfnip5
— TN DIPR (@TNDIPRNEWS) July 6, 2023
பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “தக்காளி விலை உயர்வு தமிழ்நாட்டில் மட்டுமல்ல. நாடு முழுவதும் உள்ளது. தக்காளியை குறைந்த விலைக்கு விற்கும் அரசின் நடவடிக்கைக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், பிற மாநில மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தக்காளி விலையை மேலும் குறைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தக்காளியை பதுக்கிவைப்பதாக இதுவரை தெரியவில்லை” என பேசினார்.