இது தெரிஞ்சா இனிமே நீங்க வாழைப்பழ தோலை தூக்கிப் போட மாட்டிங்க..!

தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால், செரிமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அப்படி வாழைப்பழத்தை சாப்பிடும்போது, அதன் தோலை நாம் தூக்கி எறிந்துவிடுவோம்.
ஆனால் எப்படி வாழைப்பழத்தின் தசைப்பகுதி ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளதோ, அதேப் போல் அதன் தோலிலும் பல்வேறு சத்துக்களும், பைட்டோ நியூட்ரியண்ட்டுகளும் உள்ளன.
அதுவும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ராடிக்கல்களால் சருமம் மற்றும் தலைமுடியில் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாப்பளிக்கிறது.
மேலும் வாழைப்பழத் தோல் சரும கருமையை நீக்கிப் பிரகாசமாக்கவும், சருமத்தில் உள்ள முதுமைக் கோடுகளை நீக்கவும் உதவி புரிகிறது.
அதுமட்டுமின்றி, இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், பொடுகுத் தொல்லையிலிருந்து நீக்கவும், ஸ்கால்ப்பை சுத்தமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
முக்கியமாக வாழைப்பழத் தோலில் உள்ள பொட்டாசியம் மற்றும் நீர்ச்சத்து, சருமம் மற்றும் தலைமுடியில் ஏற்படும் வறட்சியைப் போக்க உதவுகிறது.
எனவே இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய வாழைப்பழத் தோலை இனிமேல் தூக்கி எறியாமல், அவற்றைக் கொண்டு உங்கள் அழகை மேம்படுத்துங்கள்.
அதற்கு வாழைப்பழத் தோலை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்பதை தொடர்ந்து படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
முகத்தில் தேய்ப்பது:
வாழைப்பழத்தின் தோல் சரும கருமை, சரும வறட்சி, சரும சுருக்கம் போன்றவற்றை போக்குவதில் மிகவும் சிறந்தது. அதற்கு முதலில் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி, துணியால் துடைக்க வேண்டும்.
பின் வாழைப்பழத்தின் தோலை எடுத்து, அதன் உட்பகுதியால் முகத்தை மென்மையாக 15-20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இப்படி தினமும் வாழைப்பழம் சாப்பிடும்போது செய்து வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கம் நீங்கி, முகம் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும்.
வாழைப்பழத் தோல் மாஸ்க்:
அடுத்ததாக, வாழைப்பழத் தோலைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போடலாம். அதற்கு வாழைப்பழத்தின் தோலை எடுத்து, அதைச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் சிறிது பாலை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துப் பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். வேண்டுமானால் அத்துடன் சிறிது தேன் மற்றும் தயிரையும் சேர்த்துக் கொள்ளலாம். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
வாழைப்பழ தோல் ஸ்க்ரப்:
சருமத் துளைகளில் தேங்கியுள்ள அழுக்குகளை வெளியேற்ற, வாழைப்பழத் தோல் கொண்டு ஸ்க்ரப் தயாரித்துப் பயன்படுத்தலாம். அதற்கு வாழைப்பழத் தோலை எடுத்து அரைத்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூள், சர்க்கரை மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை மென்மையாகத் தேய்த்து கழுவ வேண்டும்.
வாழைப்பழ தோல் ஹேர் பேக்:
பொடுகுத் தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால் வாழைப்பழத் தோல் கொண்டு ஹேர் பேக் போடுங்கள். இதனால் பொடுகுத் தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம்.
அதற்கு வாழைப்பழ தோலை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் பாலை சேர்த்து அரைத்துப் பேஸ்ட் செய்து, அதோடு 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.