இன்று தர்ப்பணம் கொடுத்தால் ஓராண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்த பலனை பெறலாம்..!
உத்திராயண காலத்தில் வரும் தை அமாவாசை, தட்சிணாயன காலத்தில் வரும் ஆடி அமாவாசை தவிர புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிக உயர்வானதாக சொல்லப்படுகிறது. காரணம் இந்த ஒரு அமாவாசையில் மட்டும் தான் பித்ருலோகத்தில் உள்ள நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து நம்முடைய தங்கி இருந்து, நமக்கு ஆசி வழங்குவதாக ஐதீகம். அதே போல் எப்படிப்பட்ட பித்ரு தோஷத்தையும், பித்ரு சாபங்களையும் போக்கக் கூடிய ஆற்றல் படைத்ததும் இந்த மகாளய அமாவாசை தான். அதனால் தான் வருடத்தில் எந்த மாதத்தில் வரும் அமாவாசையில் விரதம் இருந்து, முன்னோர்களை வழிபட தவறி இருந்தாலும் மகாளய அமாவாசை அன்று விரதம் இருந்து, தர்ப்பணம் கொடுத்தால் ஓராண்டு முழுவதும் அமாவாசை விரதம் இருந்து, தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
மகாளய அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு கோபத்தில் இருந்தாலும், அதை தணித்து, அவர்களின் மனதை குளிர வைத்து, ஆசி பெறுவதற்கான முக்கியமான நாளாகும். இந்த நாளில் சில முக்கியமான விஷயங்களை செய்வதால் பித்ருக்கள், நாம் செய்யும் வழிபாடுகளை ஏற்று, நமக்கு ஆசி வழங்குவார்கள் என சொல்லப்படுகிறது. அதோடு ஓராண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்து, பித்ருக்கள் வழிபாட்டினை செய்த பலனும் நமக்கு கிடைக்கிறது என சொல்லப்படுகிறது. இந்த பலன்களை நாமும் பெறுவதற்கு மகாளய அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்?
மகாளய அமாவாசை அன்று பித்ருக்களின் முழு ஆசிகளையும் பெறுவதற்கு நாம் ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. குளக்கரை என்பது தேங்குகின்ற தண்ணீர் ஆகும். ஆனால் ஆறு மற்றும் கடல் நீர் என்பது நகரக் கூடியது. இதனால் இவைகளில் நீராடி, அவற்றின் கரையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. அதே போல் ஆற்றங்கரையில் மீன்கள் இருந்தால் அவற்றிற்கு பொரி வாங்கி போடுவது மிகவும் சிறப்பு. பித்ருக்கள் மீன்களின் வடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் ஆறு, குளம் ஆகியவற்றில் இருக்கும் மீன்களுக்கு பொரியை உணவாக அளிப்பது சிறப்பு.
இந்த ஆண்டு மகாளய அமாவாசை அக்டோபர் 02ம் தேதி புதன்கிழமை, உத்திரம் நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. உத்திரம், சூரியனுக்குரிய நட்சத்திரமாகும். சூரிய பகவானே பித்ரு காரியங்களுக்குரிய பலன்களை தரக் கூடியவர் என்பதால் காலை சூரிய உதயத்திற்கு பிறகு 09.30 மணிக்கு முன்பாக தர்ப்பணம் கொடுத்து முடித்து விடுவது சிறப்பு. அதற்கு பிறகு பசு மாட்டிற்கு அகத்திக்கீரை, இரண்டு மஞ்சள் வாழைப்பழம், சிறிது வெல்லம் ஆகியவற்றை தானமாக அளிக்க வேண்டும். பிறகு பசு மாட்டின் பின்புறம் தொட்டு, வணங்கி விட்டு வீட்டிற்கு வர வேண்டும்.
வீட்டில் காலை 11.30 மணி முதல் 12 வரையிலான நேரத்திற்குள் பித்ருக்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவுகளை இலை போட்டு பரிமாறி, தீபாராதனை காட்டி படைக்க வேண்டும். பிறகு முதலில் காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும். அதற்கு பிறகு யாராவது இயலாத நிலையில் இருப்பவர்களுக்கு உணவு வழழங்க வேண்டும். இதில் காகம், இயலாதவர்கள் ஆகிய இருவருமே சனி பகவானை குறிக்கக் கூடியதாகும். இவர்கள் இருவருக்கும் உணவளிப்பதால் கர்மகாரகனான சனி பகவானும், நம்முடைய பித்ருக்குளும் மனம் மகிழ்வார்கள். அவர்கள் இருவரும் உணவு அளித்த பிறகே மூன்றாவதாக நாம் உணவு சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த முறை மகாளய அமாவாசை அன்று சடங்குகளை செய்தால், ஓராண்டு முழுவதும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபட்ட பலன் கிடைக்கும்.