காங்கிரசுக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால் உங்களின் மனங்களை என்னால் வெல்ல முடியாது என்றும் நினைப்பேன் - கார்கே உருக்கம்..!
பாராளுமன்ற தேர்தல் 2-வது கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு இன்று நடக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையோடு நிறைவுபெற்றது.
கர்நாடக மாநிலம் கலபுர்கி தொகுதியில் (குல்பர்கா) கடந்த 2019-ம் ஆண்டு போட்டியிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தோல்வி அடைந்தார். இந்த முறை இதே தொகுதியில் அவரது மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து மல்லிகார்ஜூன கார்கே பிரச்சாரம் செய்கிறார்.
தனது சொந்த மாவட்டமான கலபுர்கியின் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே இது தொடர்பாக பேசியதாவது:-
இந்த முறை இந்த தொகுதியில் காங்கிரசுக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் இனி எனக்கான இடம் இங்கு இல்லை என்றும், உங்களின் மனங்களை என்னால் வெல்ல முடியாது என்றும் நினைப்பேன்.
நான் அரசியலுக்காக பிறந்தவன். தேர்தலில் போட்டியிட்டாலும் சரி, போட்டியிடவில்லை என்றாலும் சரி, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன்.
அதுவரை அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன். அதே போல் ஒருவர் தனது கொள்கையில் இருந்து ஒரு போதும் ஓய்வு பெறக் கூடாது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் சித்தாந்தங்களை வீழ்த்துவதற்காக நான் பிறந்தேனே தவிர, அவர்கள் முன் சரண் அடைவதற்காக அல்ல.
சித்தராமையாவிடம் கூட நீங்கள் முதல்வர், எம்.எல்.ஏ. போன்ற பதவிகளில் இருந்து ஓய்வு பெறலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. சித்தாந்தத்தை முறியடிக்கும் வரை அரசியலில் இருந்து ஓய்வு பெற முடியாது என்று பலமுறை கூறி இருக்கிறேன். இவ்வாறு கார்கே உருக்கமாக பேசினார்.