இனி 3 மாதத்தில் இ-செல்லான் தொகை செலுத்தாவிட்டால் லைசன்ஸ் ரத்தாகிடும்..!

உலக அளவில் சாலை விபத்துக்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. விபத்துக்களுக்கு பெரும்பாலும் சாலை விதிமீறல்களே காரணமாக இருப்பதால், சாலை விதிமீறல்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன்படி, சாலை விதி மீறல்களை கட்டுப்படுத்தும் விதமாக புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தப்படி கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ₹10,000 அபராதம் மற்றும் / அல்லது முதல் மீறலுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு ₹15,000 அபராதம் மற்றும் / அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஹெல்மெட் அணியாமல் சென்றால் 1,000 அபராதம் என அபராத தொகை கடுமையாக்கப்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஸ்பாட் பைன் போடப்படுகிறது.
இ செலான் முறையில் அபராதம் விதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் பலரும் அபராதத்தை கட்டாமல் பெண்டிங் வைத்து இருக்கிறார்கள். இதனால், ஆயிரக்கணக்கில் செல்லான் தொகை நிலுவையில் இருக்கும். இதற்கு செக் வைக்கும் விதமாகத்தான் மத்திய அரசு புதியம் திட்டம் ஒன்றை கையில் வைத்து இருக்கிறதாம். அதாவது, போக்குவரத்து விதிகளை மீறி அபராதம் விதிக்கப்பட்டால் அதை மூன்று மாதங்களுக்குள் செலுத்த வேண்டும்.
அபராதம் செலுத்த தவறினால் சம்பந்தப்பட்ட நபரின் டிரைவிங் லைசன்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். அதே ஒரு நிதி ஆண்டில் மூன்று மூறை வாகன விதி மீறலில் ஈடுபடுதல் அதாவது, சிக்னல் ஜம்பிங், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய விதி மீறலில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்டால் அவரக்ளின் டிரைவிங் லைசன்ஸ் குறைந்தது மூன்று மாதங்களுக்கு பறிமுதல் செய்யப்படும் போன்ற நடவடிக்கைகள் எடுப்பதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கோண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விதி மீறலில் ஈடுபடும் டிரைவர்களை கட்டுப்படுத்த அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இவை உள்ளதாம். சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் போது 40 சதவீதம் பேர் மட்டுமே அபராத தொகையை செலுத்துவதாகவும் பெரிய எண்ணிக்கையில் பலரும் அபராதம் கட்டாமல் இருப்பதை அடுத்து இந்த நடவடிக்கையை எடுக்க ஆலோசிக்கப்படுகிறது.
அதுமட்டும் இன்றி முந்தைய நிதி ஆண்டில் இரண்டு நிலுவை அபராத தொகை வைத்து இருந்தால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் பிரிமீயம் தொகையும் அதிகமாக இணைக்கும் வகையிலான நடவடிக்கை எடுக்கவும் அரசு பணியாற்றி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தாமல் இருப்பதற்கு அபராதம் விதிக்கப்படுவதில் உள்ள சில குறைபாடுகளும் காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, தவறான செல்லான்கள், அபராதம் விதிக்கப்பட்டடதற்கான அலர்ட் தாமதமாக வருவது போன்றவையும் காரணமாக உள்ளது. எனவே இது போன்ற குறைபாடுகளுக்கு தீர்வு காணும் விதமாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாகவும் அரசு திட்டமிட்டுள்ளது. அபராதம் கட்டும் வரையிலும் மாதம் தோறும் வாகன ஓட்டிகளுக்கு மெசேஜ் மூலமாக அலர்ட் செய்து கொண்டே இருப்பது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளது.