1. Home
  2. தமிழ்நாடு

2 நாட்களில் நல்ல முடிவை அறிவிக்கவில்லையென்றால்... ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!

1

சம வேலைக்கு சம ஊதியம், போட்டி தேர்வுக்கு மறுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் (டிபிஐ)  மூன்று ஆசிரியர்கள் சங்கங்களின் சார்பில் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. 

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், இடைநிலை ஆசிரியர்கள், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தினர் ஆகியோர் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்களும், இசை, ஓவியம், தையல் பயிற்சி ஆகியவற்றுக்கான பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதேபோல, புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு போட்டித்தேர்வு நடத்தும் முடிவை கைவிடக் கோரி, டெட் தேர்வு எழுதியுள்ள ஆசிரியர்களும் போராடி வருகின்றனர்.

சுமார்‌ 7 ஆயிரம்‌ ஆசிரியர்கள்‌ இரவு பகலாக நடத்தி வரும் போராட்டத்தில் இன்று வரை 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சோர்வடைந்து மயக்க நிலைக்கு சென்றனர்‌. அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிலர் மருத்துவமனைக்கு செல்லாமல் போராட்ட களத்திலேயே சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது தங்கள் கோரிக்கைகளை நேரடியாக ஆசிரியர்கள் அமைச்சர் முன்பு எடுத்துக்கூறினர்.எனினும் அரசு சார்பில் எந்தவிதமான உறுதியான பதிலையும் அமைச்சர் அன்பில் மகேஷ் அளிக்காத நிலையில், பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனையடுத்து ஆசிரியர்களின் சார்பில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இடைநிலை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த பொதுச்செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் பேசுகையில், “கடந்த ஆட்சிக்காலங்களில் போராட்டம் நடத்திபோது நேரில் வந்து ஆதரவளித்ததோடு, எங்களது கோரிக்கை திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் கூட சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று பல இடங்களில் வாக்குறுதியாகவும் அவர் அறிவித்தார்.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தும் கடந்த 30 மாதங்களாகியும் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போராட்டம் நடத்தினோம்.அப்போது ஊதிய நிர்ணயம் தொடர்பாக 3 பேர் அடங்கிய குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். மேலும் அடுத்த 3 மாதத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் வாக்குறுதியும் அளிக்கப்பட்டது. ஆனால் அறிவித்து 10 மாதங்கள் ஆகியும் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததால் தற்போது மீண்டும் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

கடந்த 14 ஆண்டுகாலமாக சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அதனை தற்போது போராடி வரும் 20 ஆயிரம் ஆசிரியர்களை கருத்தில் கொண்டு இன்றிலிருந்து நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.அதற்கு அமைச்சர், ”எங்களது கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த இரண்டு நாட்களில் நல்ல முடிவை அறிவிப்போம்” என்று கூறியுள்ளார்.இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. இத்தனை நாட்கள் போராட்ட களத்தில் இருந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.அப்படி நடந்தால் உடனடியாக நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம். இல்லையேல் பணி செல்ல மறுத்து எங்களது போராட்டத்தை தொடர்வோம்” என்று ராபர்ட் அறிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like