உங்களுக்கு தைரியம் இருந்தால் இதை சொல்லுங்கள் பார்க்கலாம் - அமித்ஷா..!

கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு மதுரையில் நடந்து முடிந்தது. ஒரு வாரம் கழித்து அதே இடத்திற்கு அமித்ஷா வருவது அரசியல் களத்தில் கவனிக்கத் தகுந்ததாக மாறியது.
தனி விமானம் மூலம் நேற்று மதுரை வந்து இறங்கிய அமித்ஷாவை பாஜக தலைவர்கள் வரவேற்றனர். தனியார் ஹோட்டலில் நேற்று இரவு தங்கினார். இன்று காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து ஜிஆர்டி ஹோட்டலில் நடைபெற்ற பாஜக மையக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறைகளை வழங்கி உள்ளார்.
தொடர்ந்து பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டம் மதுரை வேலம்மாள் மைதானத்தில் நடைபெற்றது. அதில் அமித்ஷா, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அமித்ஷா, “மதுரையில் சொக்கநாதர், கள்ளழகர், முருகனை வணங்கி உரையைத் தொடங்குகிறேன். தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்.
மதுரை சாதாரண நகரம் அல்ல. 3 ஆயிரம் ஆண்டு கால வரலாற்று பெருமை கொண்ட முக்கியமான புனித இடம். வரும் 22 ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு இங்கு நடக்கிறது. அதை இந்த மண்ணில் சிறப்பாக நடத்தி தர வேண்டும்.
மதுரை மண் பல விதமான மாற்றங்களுக்கு வித்திடும் மண். இந்த கூட்டமும் மாற்றத்தை உருவாக்கும். தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் என உங்களிடம் கூறுகிறேன். வரக்கூடிய 2026 சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அ.தி.மு.க., -பாஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும். நான் எந்த பகுதியில் இருந்தாலும் எனது சிந்தனை தமிழகம் மீது தான் உள்ளது.
அமித் ஷாவினால் தி.மு.க., ஆட்சியை அகற்ற முடியாது என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். அமித் ஷாவினால் முடியாது என சொல்வது சரிதான். ஆனால் தமிழக மக்கள் உங்களை தோற்கடிப்பார்கள். அதற்காக காத்துக் கொண்டு உள்ளார்கள். மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்தவனாக சொல்கிறேன் வரும் தேர்தலில் தி.மு.க.,வை தூக்கி எறிய மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்.
ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக தமிழகத்தில் இருந்து மிகப்பெரிய ஆதரவுக் குரல் ஒலித்தது. பஹல்காமில் அப்பாவி பொது மக்களை , மதத்தின் பெயரால் கொன்ற பயங்கரவாதிகளை, முப்படையை திரட்டி, அவர்கள் மண்ணிலேயே பிரதமர் மோடி அழித்தார். இதுதான் அவர்களுக்கு நாம் அளித்த பாடம்.
இதற்கு முன்னர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, முந்தைய அரசுகள் எதுவும் செய்யவில்லை. ஆனால் காஷ்மீரின் யூரி, பஹல்காமில் தாக்குதல் நடந்த போது, நமது முப்படைகள் வீரத்தை வெளிப்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில், பயங்கரவாதிகள் பதுங்கிய இடத்தை கண்டறிந்து துல்லியமாக தாக்கி, அவர்களின் இடத்தை மண்ணோடு மண்ணாக்கியது நமது ராணுவம். மோடி ஆட்சியில் ராணுவத்திலும் தன்னிறைவான நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் சிறப்பான நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை பேசும் இந்த நேரத்தில் இந்திய வான்வெளி சாதனையை சொல்ல வேண்டும். இந்த நாட்டின் இளைஞர்கள் காவிரி இன்ஜின் என்ற சொல்லை சொல்ல துவங்கி உள்ளனர். பாகிஸ்தான் ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் வீசியபோது, அனைத்தையும் அடித்து தூள் தூளாக்கி இந்திய ராணுவம், நமது வான் பாதுகாப்பை உலகத்திற்கு பறைசாற்றியது. ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. பயங்கரவாதிகள் மீண்டும் வாலாட்டினால், அவர்கள் வீடுகளுக்குள்ளேயே அழிக்கப்படுவார்கள் என பிரதமர் கூறியுள்ளார்.
வரக்கூடிய சட்டசபை தேர்தல், ஒவ்வொரு தொண்டருக்கும் முக்கியமான, அவசியமான களமாகும். ஒடிசா மாநிலத்திலும் முழு மெஜாரிட்டி உடன் பா.ஜ., ஆட்சி அமைந்தது. ஹரியானாவிலும் மிகப்பெரிய வெற்றியுடன் 3வது முறையாக பதிவு செய்தோம். மஹாராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பா.ஜ., பதிவு செய்துள்ளது.
2025 ம்ஆண்டு மிகப்பெரிய சாதனை படைத்தோம். டில்லியில் கெஜ்ரிவால் ஆட்சியை முடித்து, 27 ஆண்டுக்கு பிறகு டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைத்து உள்ளது. 2025 ல் டில்லியில் எப்படி ஆட்சி அமைத்தோமோ, 2026ல் ஆட்சி அமைப்போம். 2026 ல் நடக்கும் தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.
தி.மு.க., ஆட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. டாஸ்மாக்கில் 35 ஆயிரம் கோடி ஊழல் செய்து சட்டவிரோதமாக ஊழல் ஆட்சி நடக்கிறது. தமிழக அரசு, 100க்கு 100 சதவீதம் தோல்வியடைந்த அரசாக காட்சி அளிக்கிறது. தி.மு.க., அரசு தேர்தல் நேரத்தில் வாக்குறுதி பட்டியலை அளித்தது. ஆனால், அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றாமல், 90 சதவீதம் நிறைவேற்றியதாக சொல்கின்றனர். உங்களுக்கு தைரியம் இருந்தால், தேர்தல் வாக்குறுதி பட்டியலை பார்த்து எத்தனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என பார்த்து சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் தமிழ் தமிழ் என பேசும் நீங்கள், பாட திட்டத்தை தமிழில் ஏன் கொண்டு வரவில்லை. உயர்கல்வியை தமிழில் கற்பிப்பதற்கு என்ன தடை உள்ளது பொறியியல் பாடத்திட்டம் தமிழில் இயற்றப்பட வேண்டும். தமிழின் மரபு சின்னமான, செங்கோலை நாட்டின் உயர்ந்த இடத்தில் மோடி கொண்டு சென்ற போது, நன்றி சொன்னீர்களா?
மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ. 1.53 லட்சம் கோடி மட்டுமே கொடுத்தது. ஆனால், பா.ஜ., ஆட்சியில் 6.80 லட்சம் கோடி வழங்கப்பட்டு உள்ளது. சாலை மேம்பாட்டுக்காக ரூ.63 ஆயிரம் கோடியும், உள்கட்டமைப்புக்காக ரூ.73 ஆயிரம் கோடியும், விமானம் கட்டுவதற்கும் ரூ.3,500 கோடியும் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
தி.மு.க., ஆட்சியை எப்படி வீட்டிற்கு அனுப்ப போகிறோம். எப்போது அனுப்பப்போகிறோம்? அதற்கு என்ன செய்யப்போகிறோம் என தொண்டர்கள் சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும். அதே எண்ணத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.