லிங்க் கிளிக் செய்தால் 500 ரூபாய் பணம்..! நூதன முறையில் மோசடி செய்வதாக பா.ஜ.க. மீது தி.மு.க. புகார்..!
பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 19-ஆம் தேதி (19.04.2024) ஒரே கட்டமாக 40 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் நிலையில், நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இறுதியாக ஜூன் 1-ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்து ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இறுதிக்கட்ட பரப்புரையில் அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் . குறிப்பாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி என தேசிய தலைவர்களும் தமிழ்நாட்டில் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்பட அனைத்து கட்சித்தலைவர்களும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆங்காங்கே தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார் எழுத்த வண்ணம் இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க. பெயரில் வாக்காளர்களுக்கு நூதன முறையில் வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி மோசடி செய்யப்படுவதாக தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்காளர்களுக்கு பா.ஜ.க. சார்பாக அதன் பூத் ஏஜெண்டுகள் வாட்ஸ் அப் மூலம் லிங்க் ஒன்றை அனுப்புவதாகவும், அதை கிளிக் செய்தால் 500 ரூபாய் பணம் கிடைப்பதாகவும் நூதன முறையில் பரப்புரை செய்து வருகிறார்கள். பொதுமக்கள் சிலர் தெரியாமல் அந்த லிங்கை கிளிக் செய்து தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் பூத் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வின் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான டி.பி.எம் மைதீன் கான் நெல்லை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.