இன்று இந்த மந்திரத்தை சொன்னால் துன்பம் விலகும்..!
ராமர், ரகு வம்சத்தில் தோன்றியவர் என்பதால் அதோடு பொருந்தி வரும் நேரம், நாள் ஆகியவற்றின் அடிப்படையிலும், அயோத்தி ராமர் கோவிலின் புகழ் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதற்காகவும் ஜனவரி 22 ம் தேதியை கோவில் கும்பாபிஷேகத்திற்காக தேர்வு செய்துள்ளார்கள்.
மிக புனிதமான முகூர்த்த நாளாக குறிக்கப்பட்டுள்ள ஜனவரி 22ம் தேதியன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மத சடங்குகள், யாகங்கள், ஹோமங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நாடே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் அனைவராலும் கலந்து கொள்ள முடியாது. இவ்விழாவில் கலந்து கொள்ள பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அனைவரும் ஜனவரி 23ம் தேதிக்கு பிறகு அயோத்தி ராமரை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
ராமரை விட ராம நாமத்திற்கு வலிமை அதிகம் என்பார்கள். ராம நாமத்தை ஜபம் செய்வதால் ராமரின் அருள் மட்டுமல்ல, அனுமனின் அருளும் சேர்ந்தே கிடைக்கும். ராமரின் அருளை பெறுவதற்கு மிக எளிய வழி நாம ஜபம் ஒன்று மட்டுமே. அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும் ஜனவரி 22ம் தேதியன்று இந்த ராம மந்திரங்களை மனதார ஜபம் செய்தாலே ராமரின் அருள் கிடைப்பதுடன், துன்பங்கள் அனைத்தும் விலகி விடும். அப்படி என்ன மந்திரத்தை இந்த நாளில் சொன்னால் சிறப்பு, அந்த மந்திரத்தை எப்படி சொல்ல வேண்டும் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.
1. "ராம ராமே நமஹ"
2. "ஓம் ஜானகி வல்லபாய ஸ்வாஹா"
3. "ஓம் நமோ பகவதே ராமச்சந்திராய"
4. "ஓம் ராமே தனுஷ்பனயே நமஹ"
5. "ஸ்ரீ ராம் சரணம்"
6. "ஓம் ராமச்சந்திராய நமஹ"
7. "ஓம் ராமபத்ராய நமஹ"
8. "ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்"
9. "ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ஸ்ரீராம ப்ரசோதயாத்"
10. "ராம ராமேதி ராமேதி ராமே ராமே மனோரமே
சகஸ்ரநாம துதுல்யம் ராமநாம வரனே"
தரையில் அமர்ந்து நாம ஜபம் செய்பவர்கள் ஏதாவது ஒரு விரிப்பு விரித்து அமர வேண்டும். வெறும் தரையில் அமர்ந்து மந்திர ஜபம் அல்லது நாம ஜபம் செய்யக் கூடாது.
வீட்டில் ராமாயண புத்தகம் இருந்தால் அதை ராமர் படத்திற்கு வலது புறமாக வைத்து, அதற்கு அருகில் ஆசனம் ஒன்றை அமைத்து, அதன் மீது விரிப்பு விரித்து வைக்க வேண்டும். ராம நாமம் ஜபிக்கப்படும் இடங்களில் எல்லாம் அனுமன் நிச்சயம் வந்து, ராம நாமத்தை கேட்பார் என்பதால் ராமாயண புத்தகம் வைப்பதும், அனுமனுக்கு என்று தனியாக ஆசனம் அமைப்பதும் ஒரு முறையாகும்.
108 அல்லது 1008 என்ற எண்ணிக்கையில் மந்திர ஜபம் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.