என் மீது கோபம் என்றால் என் மீது கை வையுங்கள்...வாயில்லா ஜீவனை துன்புறுத்தாதீர்கள் : அண்ணாமலை!
கோவை விமான நிலையத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 35 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என அதிமுக தரப்பில் கூறப்படுவதைப் பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே ஏதோ பிரச்சினை தொடங்கியுள்ளதாக நான் பார்க்கிறேன். 2019-ல் ஆளுங்கட்சியாக இருந்தபோது கூட அதிமுகவால் மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் தான் வெற்றிபெற முடிந்தது. அதிமுக தலைவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதையே 2024 தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே எஸ்.பி.வேலுமணி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கோவை அதிமுக கோட்டை என்று கூறப்பட்டு வந்த நிலையில் பாஜக 11.5 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். ஆளுங்கட்சியின் இடர்பாடுகள், பணபலம், படை பலம், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட அனைத்தையும் தாண்டி மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். இந்த வாக்குகள் எங்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
எங்கள் கட்சியின் தொண்டர்கள் மொட்டை அடித்தல், விரலை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகுந்த மனவேதனையளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. பொது இடங்களில் ஆட்டை வெட்டி வீடியோ வெளியிடுவது மிகவும் கண்டனத்துக்குரியது. நான் கோவையில் தான் இருக்கப்போகிறேன். திமுகவினருக்கு கோபம் இருந்தால் என் மீது கை வைத்துப் பார்க்கட்டும்.
தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாததற்கு நான் தான் காரணம் என கூறியுள்ள எஸ்.வி.சேகரை எனக்கு யார் என்றே தெரியாது. என்னுடைய செயல்பாடுகளால் தான் பாஜக தமிழகத்தில் இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது என நான் கூறுவேன். மக்களுக்கு நாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வோம். தமிழகத்தில் பாஜக படிப்படியாக தான் வெற்றியைப் பார்க்க முடியும். கோவை தொகுதியில் இதற்கு முன்பு போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணனை பெற்ற வாக்குகளை விட நான் பெற்ற வாக்குகள் குறைவு என எஸ்.பி. வேலுமணி அண்ணன் தவறான புள்ளி விவரங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.
நாங்கள் கோவை மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். கோவை மக்களின் வாக்கு எங்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. நடிகர் விஜய் உள்ளிட்ட புதியவர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றனர். 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும். அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்பது நான் பேசுவதில் இருந்தே தெரிந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
DMK supporters slaughtered a goat with Annamalai's picture in a shocking display of barbarism.
— Vishnu Vardhan Reddy (Modi ka Parivar) (@SVishnuReddy) June 6, 2024
This is the true face of the anti-Sanatan I.N.D.I Alliance.
And now they should hear the answer of @annamalai_k -
"Instead of going after innocent goats, come to me, I'm here only"… pic.twitter.com/OHkR8ZsRpz
அண்ணாமலை கையில் ரபேல் வாட்ச் கட்டியிருந்தார். அது குறித்து திமுகவினர் கேள்வி எழுப்பிய போது தனக்கு வசதியெல்லாம் இல்லை என்றும் வெறும் ஆட்டை வைத்து பிழைத்து வருகிறேன் என கூறியிருந்தார். அது முதல் அவரை திமுகவினர் ஆட்டுக்குட்டி என்றும் ஆடு என்றும் கிண்டல் செய்து அழைத்து வந்தனர்.
கோவையில் லோக்சபா வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டதுமே திமுகவினர் சமூகவலைதளங்களில் ஆட்டை பிரியாணி போடுவோம் என கிண்டலாக தெரிவித்திருந்தனர். அப்போது கூட செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ஆட்டை பிரியாணி சமைத்தாலும் கொடுமைப்படுத்தாமல் செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் கோவையில் திமுக டெபாசிட் வாங்காது என சவால் விட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் கோவை லோக்சபா தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் அண்ணாமலை தோல்வி அடைந்த போது திமுகவினர் மட்டன் பிரியாணி கொண்டு வந்து விநியோகம் செய்தனர்.
இந்த நிலையில் கோவை வெற்றியை கொண்டாடும் வகையில் திமுகவினர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர். அதில் திமுகவினர் பட்டப் பகலில் நடுரோட்டில் வைத்து ஒரு ஆட்டை வெட்டுகிறார்கள். ஆட்டின் கழுத்தில் அண்ணாமலை படத்தை மாட்டிவிட்டு அந்த படத்தையும் சேர்த்து ஒரே வெட்டாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் ஆடு துடிக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. மட்டன் பிரியாணி செய்வதற்காக ஆட்டை வெட்டிய போது வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆட்டை வெட்டுவது போல் அண்ணாமலையை வெட்டிக் கொல்வோம் என்ற அர்த்தத்தில் அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த ஆடு வெட்டும் வீடியோவுக்குத்தான் அண்ணாமலை ஆட்டை எதுவும் செய்யாதீர்கள் என் மீது கை வையுங்கள் என்றார்.