1. Home
  2. தமிழ்நாடு

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதானியின் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள தாராவி திட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்..!

1

சிவசேனை (யுபிடி) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தாரவி குடிசைகள் மறுவளர்ச்சித் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வோம். தற்போதுள்ள அரசு இந்தத் திட்டத்தை ரத்து செய்யாததற்கானக் காரணத்தைக் கூறவேண்டும். மும்பையை அதானி நகரமாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

உலகில் மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நகரப்பகுதியில் ஒன்றான தாராவியில் கொண்டு வரப்படவிருக்கும் திட்டத்தின் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத பல சலுகைகள் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அதுபோன்ற சலுகைகளை நாங்கள் வழங்கமாட்டோம். தாராவி மக்களுக்கு எது நன்மையைத் தருமோ அதையே நாங்கள் செய்வோம். தேவைப்பட்டால் அதானி குழும ஒப்பந்தத்தை ரத்து செய்து புதிய ஒப்பந்தத்திற்கு அறிவிப்பு வெளியிடுவோம்.

ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி எண் வழங்கப்பட்டு, தாராவியில் வசிக்கும் மக்களை தகுதியுடையவர்கள் மற்றும் தகுதியில்லாதவர்கள் என்ற வலையில் சிக்க வைக்க அரசாங்கம் விரும்புகிறது. வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் தாராவி மக்களின் நிலங்களை கையகப்படுத்த இந்த அரசு முயற்சிக்கிறது. தாராவி மட்டுமின்றி நகரிலுள்ள 20 இடங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் நிலங்களை வாங்கும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் நகரத்தில் ஏறத்தாழ்வுக்கு வழிவகுக்கும். மக்களை இடமாற்றம் செய்தால் புதிய இடத்தில் அவர்கள் அழுத்தங்களை சந்திக்க வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய மும்பையின் பிகேசி தொழில் நகரத்தில் அருக்கேயுள்ள தாராவியில் பெரிய அளவில் செயல்படுத்தப்பட இருக்கும் குடிசைகள் மறுவளர்ச்சித் திட்டத்தின் மூலம் ரூ.20,000 கோடி வருமானம் கிடைக்குமென்று கூறப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் அதானி குழுமத்தினருக்கு இந்தத் திட்டத்தின் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மேலும், டி.எல்.எஃப். மற்றும் நபன் டெவலப்பர்ஸ் ஆகியோரும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மும்பை தெற்கு மத்தியத்தொகுதியில் சிவசேனை (யுபிடி) -யின் வேட்பாளரான அனில் தேசாய், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனை கட்சியின் எம்பி ராகுல் ஷெவாலேவைத் தோற்கடித்து 53,384 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதில், தாராவி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் அவர் 36,857 வாக்குகள் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like