நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... கேஸ் சிலிண்டர் ரூ.500க்கு கிடைக்கும்..!
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு, வரும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. ம.பியில் வரும் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கார்கே பேசியதாவது: ம.பியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் கிடைக்கும்.
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் ரூ.500க்கு கிடைக்கும். பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும். வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மாநிலத்திலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவோம்.
கடந்த முறை ம.பியில் பாஜ., எங்கள் எம்எல்ஏக்களை திருடி ஆட்சி அமைத்தனர். பாஜ.,வினர் எப்போதும் காங்கிரஸிடம் 70 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்று கேட்கின்றனர். நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றினோம். அதனால் தான் மோடி பிரதமரானார். சிலர் அரசியலமைப்பை மாற்ற முயல்கிறார்கள். ஆனால் 140 கோடி மக்கள் அதைப் பாதுகாக்க இருப்பதால் அது நடக்காது.
மணிப்பூரில் சில மாதங்களாக வன்முறை நடந்து வருகிறது. அங்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், ஆனால் பிரதமர் மோடி அமைதியாக அமர்ந்திருக்கிறார். பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்லவில்லை. பார்லிமென்டில் அதைப் பற்றி பேசவில்லை. காங்கிரஸைப் பற்றி மோசமாகப் பேசுகிறார்.
மோடியின் கனவில் கூட ராகுல் வருவார் என்று நினைக்கிறேன். மத்திய பிரதேசத்தில் கமல் நாத்துக்கு ஓட்டளித்து காங்கிரசை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.