இது மட்டும் நடந்தால் 2026-ல் திமுகவை எதிர்த்து களமிறங்குவோம்: பி.ஆர்.பாண்டியன்!
மதுரையில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தென் மண்டல ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் நீர்பாசனத்துறை முடங்கிக் கிடக்கிறது. காவிரி, குண்டாறு இணைப்பு திட்டமும் முடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜல்சக்தித் துறை முல்லை பெரியாறு அணையினை ஆய்வு செய்ய ஆய்வுக் குழுவை நியமித்துள்ளது. உச்ச நீதிமன்றம் நியமித்த ஆய்வுக் குழுவிற்கு எதிராக மத்திய அரசு புதிதாக ஒரு ஆய்வுக் குழுவை அமைத்து இருக்கிறது. முல்லை பெரியாறு அணை ஆய்வை தமிழக பொறியாளர்கள் புறக்கணித்ததை வரவேற்கிறோம். முல்லை பெரியாறு அணையை பராமரிக்க, கேரள அரசு முட்டுக்கட்டை போடுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கேரள அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும்.
நீர் பாசன திட்டத்துக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதி குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500-ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 6,000-ம் வழங்க வேண்டும். அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக களம் இறங்குவோம்.
காவிரி, முல்லை பெரியாறு உரிமை மீட்பில் திமுக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகள் போராட்டத்திற்கும், ஜீவாதார உரிமைகளை மீட்கவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துணை நின்று செயல்பட்டார். ஆனால் திமுக அரசு, விவசாயிகளுக்கு ஆதரவு இன்றி கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக செயல்படுகிறது எனக் குற்றம் சாட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.