1. Home
  2. தமிழ்நாடு

இப்படி நடந்தால் அப்புறம் எப்படி நோய் வராமல் இருக்கும்..? சீமான்..!

Q

எண்ணூர் அனல் மின் நிலைய கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: அனல், புனல், அணு, நிலக்கரி இப்படி எல்லாம் மின் உற்பத்தி திட்டங்களும், நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்று சொல்லித்தான் கொண்டு வரப்பட்டது. இந்த வார்த்தைகளை கேட்கும் போது இனிப்பாகத்தான் இருக்கும். மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ்வது, நாடு எப்படி வளர்ச்சி பெறும்? என்பது எல்லாம் சரிதான்.
மின்சாரத் தேவையை நிறைவு செய்வதற்கு நிலக்கரி, அணு உலை, அனல்மின் நிலைய உற்பத்தி தான் இருக்கிறது என்றால், அதைப்பற்றி யோசிக்கலாம். உலகில் பாதுகாப்பான அணு கிடையாது என்றே விஞ்ஞானிகளே சொல்கிறார்கள். அணுகுண்டு மீது உட்காருவதும், அணுஉலையின் அருகே இருப்பது ஒன்று தான் என்று அவர்கள் சொல்கிறார். அதனை நாங்கள் அனுமதித்தோம்.
அனல் மின்சாரத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளை, வாழ்வாதார இழப்பை, மனச்சான்றோடு பேசுகிறவர்கள், வாருங்கள். பார்ப்போம். நீர், நிலம், காற்று எல்லாம் நஞ்சாகி விட்ட பிறகு, விளக்கை வைத்துக் கொண்டு, பிணத்தை வைத்து அழலாம். தாயை கொன்றுவிட்டு, என்ன வளர்ச்சியை காணப்போகிறீர்கள். வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்ற வார்த்தைகளை சொல்லியே பல தொழிற்சாலைகள் இப்படித்தான் கொண்டு வரப்பட்டது. 100 பேரில் 90 பேர் புற்றுநோயால் மரணம். 3 வயது குழந்தைக்கு புற்றுநோய் வரக் காரணம் என்ன? தாய்ப்பால் நஞ்சானதால், அதனை குடித்த குழந்தைக்கு புற்றுநோய்.
ஜப்பான், ஆஸ்திரேலியா, அரபு நாடுகளில் கடல் அலைகளில் மின்சாரம் தயாரிக்கிறார்கள். சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க முடியாதா? காற்றாலை, கடல் அலை, சூரியஒளி ஆகியவை தீராத வளம். நிலக்கரி தீர்ந்து விடும் வளம். இந்த அனல் மின்நிலையத்தை வேண்டும் என்று சொல்பவர்கள், உங்களின் வீட்டை, அனல் மின் நிலையத்திடம் கட்டிக் கொள்ளுங்க. எங்களுக்கு நீங்கள் வசிக்கும் இருப்பிடத்தை கொடுத்து விடுங்கள். பிறகு, எவ்வளவு ஆண்டுக்கு வேண்டுமானாலும் அனல்மின் நிலையத்தை நீட்டித்து கொள்ளுங்கள்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இண்டிகோவை தவிர வேறு விமானங்கள் கிடையாது. அப்புறம் எதுக்கு 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தை பறித்து விமான நிலையம் கட்ட வேண்டும். வ.உ.சிதம்பரனார், காமராஜர் துறைமுகங்களில் 40, 50 சதவீத பணிகள் தான் நடக்கிறது. அப்புறம் எதற்காக 6,111 ஏக்கரில் காட்டுப்பள்ளியில் துறைமுகம் அமைக்கப்படுகிறது. அந்த துறைமுகத்தை கட்டப்போவது அதானி. ஒரு தனிப்பட்ட நபரின் வளர்ச்சியை, ஒரு நாட்டு மக்களின் வளர்ச்சி என்று எப்படி ஏற்கிறீர்கள்.
கொரோனா சமயத்தில், 80 கோடி ஏழைகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா கூறியிருக்கிறார். வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லுபவர்கள், இரவு உணவு இல்லாமல் படுக்கச் செல்ல மாட்டார்கள், பசியில்லாத பச்சிளங் குழந்தைகள் படுக்கச் செல்வார்கள் என்று உறுதி தருவார்கள் என்றால், எத்தனை அணு உலைகளை வேண்டுமானாலும் கட்டுங்கள். ஒரு பிரச்னையும் இல்ல.
மின்சார உற்பத்திக்காக அணு உலை கண்டுபிடிக்கப்பட்டதா? சூரிய ஒளி தகடுகள் விவசாய நிலங்களில் தான் போடுவார்களா? அரசு கட்டிடங்களின் மேற்கூரையில் போட முடியாதா? விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாத நிலங்களில் போட முடியாதா? ராஜஸ்தானில் 365 நாட்களில் 300 நாட்கள் தடையில்லாமல் சூரிய ஒளி கிடைக்கிறது. அங்க சூரிய ஒளி தகடுகளை போடு, யாரு கேட்பா?
போர் நடந்து, பேரழிவு நடந்த இடத்தில் கூட மக்களை மறுபடியும் குடியமர்த்த முடியும், ஆனால், அணு உலை வெடித்த இடத்தில் மக்களை மீண்டும் குடியமர்த்த முடியாது? கேரளாவில் அணு உலை கொண்டு வர கம்யூனிஸ்ட்களும், காங்கிரசும் எதிர்த்தது. ஏனெனில், வெளிச்சத்தில் வாழ்வதை விட, நான் உயிரோடு வாழ வேண்டும் என்று சொன்னார்கள். காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை அரசு செய்யாமல், தனியாருக்கு ஒப்பந்தம் கொடுப்பது ஏன்? அனல் மற்றும் அணு மின் நிலையங்களை அரசு நடத்தினால், எதிர்த்து போராடுபவர்கள் மீது வழக்கு போடலாம், சுட்டுக்கொல்லலாம்.
மற்ற மாநிலங்களுக்கு ரூ.5க்கு மின்சாரம் கொடுக்கும் அதானி, தமிழகத்தில் நிலத்தை கொடுத்து, நிலத்தடி நீரை கொடுத்து, அனைத்தையும் கொடுத்தும், ரூ.7க்கு மின்சாரத்தை கொடுக்கிறார். மின்சாரத்துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு உள்ளது. ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் தேவை, நாடே சொல்லுது 28 மரங்கள் தான் இருக்கிறது. அப்புறம் எப்படி நோய் வராமல் இருக்கும், இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like