இது மட்டும் நடந்திருந்தால் ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது - இ.பி.எஸ்..!
விருதுநகரில் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சை சரமாரியாக விமர்சனம் செய்தார். 'பொய் சொல்லலாம். பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது' என்றார் ஸ்டாலின்.விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் வகையில், இன்று நவ.,11 மாலை இ.பி.எஸ்., கூறியதாவது:
கருணாநிதி குடும்பத்தில் மட்டும் பிறக்கவில்லை என்றால் ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது.
நான் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை புள்ளி விவரத்துடன் துண்டுச்சீட்டு இல்லாமல் பேசுகிறேன். ஸ்டாலினும் கடந்த 3 ஆண்டு ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களைப் பற்றி பேசத் தயாரா?
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக, அம்மா மினி கிளினிக் திட்டத்தை முடக்கி ரத்து செய்து விட்டனர். மடிக்கணினி திட்டம் ரத்து செய்து விட்டனர்.
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இப்போது உரம் தேவை. அது முழுமையாக கிடைக்கவில்லை. திறமையற்ற அரசு நடந்து கொண்டிருக்கிறது.
தி.மு.க., 2021 தேர்தலில் வெளியிட்ட, நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்து விட்டனர்.
கோவையில் 1952 கோடி ரூபாயில் பிரமாண்டமான உயர் மட்டப்பாலம் அ.தி.மு.க., ஆட்சியில் 70 சதவீதம் பணி முடிந்தது. தி.மு.க., ஆட்சி 42 மாதங்கள் நடந்தும் எஞ்சிய பணி முடிக்கவில்லை.
காவிரி குண்டாறு இணைப்பு விவசாயிகள் கனவு திட்டம்; திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவர். அதை நாங்கள் தொடங்கினோம். அவர்கள் எந்த பணியும் செய்யாமல் முடக்கி விட்டனர்.
பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்டும் பணிகளை நாங்கள் தொடங்கினோம் என்பதற்காகவே முடக்கிவிட்டனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் சிறப்பான செயல்பாட்டுக்காக பல்வேறு துறைகள் மத்திய அரசின் விருது பெற்றன.
இப்போது சட்டம் ஒழுங்கு இல்லை. இன்று போதைப்பொருள் தாராளமாக எல்லா இடத்திலும் கிடைக்கிறது.
குடும்பத்தை பற்றி சிந்திக்கவே இந்த முதல்வருக்கு நேரம் இல்லை. மக்களை பற்றி கவலைப்படாத முதல்வர் என்றால் இன்றைய முதல்வர் ஸ்டாலின் தான்.
'எனக்கு திறமையில்லை; விமர்சிக்க அருகதையில்லை' என்கிறார் ஸ்டாலின்.
நான் சாதாரண கிளை செயலாளராக இருந்து இவ்வளவு பெரிய இயக்கத்தின் பொதுச்செயலாளராக உயர்ந்தவன். உங்களைப்போல், தந்தை அடையாளத்தை வைத்து பதவி பெறுவது எல்லாம் திறமையில்ல.
கருணாநிதியின் அடையாளத்தை வைத்துத்தான் ஸ்டாலின் முதல்வர்; கட்சி தலைவர் ஆனார். நான் அப்படியில்லை; சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்து படிப்படியாக வந்தவன்.உதயநிதி எந்த தகுதியில் அமைச்சர் ஆனார்? மிசாவில் சிறை சென்றாரா, எத்தனை முறை போராட்டம் நடத்தி சிறை சென்றார்?
கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் மகன் என்பதால் தான் அவருக்கு எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதல்வர் எல்லாம் கிடைக்கிறது. உதயநிதிக்கு கொடுக்கப்பட்ட இலாகாவில் சிறப்பாக செயல்பட்டு 100க்கு 100 மதிப்பெண் பெற்றார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.அப்படியானால் மற்ற அமைச்சர்கள் பெயில் ஆகி விட்டார்களா, அவர்கள் எல்லாம் பணி செய்யவில்லையா?
தன் மகன் உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்று முதல்வரே புகழ்ந்து கொள்கிறார்.தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் இருக்கிறது. அ.தி.மு.க., தலைமையை ஏற்று வரும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் தான் கூட்டணி.
இவ்வாறு இ.பி.எஸ்., தெரிவித்தார்.