இனி அரசு மருத்துவர்கள் மீது தாக்குதல் நடந்தால் 6 மணி நேரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்..!
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்து உள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: சமீபத்தில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து உள்ளன. சுகாதாரப் பணியாளர்கள் பணியின் போது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உடல்ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இவை பெரும்பாலும் நோயாளிகள் அல்லது அவர்களின் உறவினர்களால் செய்யப்படுகின்றன.
இனி பணியில் இருக்கும் சுகாதார பணியாளர்கள் தாக்குதலுக்கு அல்லது வன்முறைக்கு உள்ளானால் அடுத்த 6 மணி நேரத்திற்குள் போலீசில் புகார் அளிக்க வேண்டும். உடனே எப்ஐஆர் போடப்பட வேண்டும். தவறினால், இதற்கு சம்பந்தப்பட்ட அமைப்புகளின் தலைமையே பொறுப்பு. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.