பொம்மை முதலமைச்சர் சரியாக இருந்தால் இவ்வளவு நிர்வாக சீர்கேடுகள் நிகழுமா? ஜெயக்குமார்!
பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார். அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய அவர் கடந்த ஜென்மத்தில் பாவ புண்ணியங்களின் அடிப்படையில்தான் இந்த ஜென்மத்தில் நாம் பிறந்திருக்கிறோம்.. மாற்றுத்திறனாளிகள் ஏழைகள் அப்படி பிறந்தவர்கள் தான் என்ற ரீதியில் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது அங்கிருந்து அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் ஒருவர் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பள்ளிக்கூடத்தில் ஆன்மீகம் போதிக்கிறீர்கள்.. மறுபிறவி பாவ புண்ணியம் பற்றி பேசுவது என்ன நியாயம்? என வாக்குவாதம் செய்தார். இதை அடுத்து அவரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.
இதை அடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆவேசமாகக் கூறினார். மேலும் மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக மகாவிஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் புகார் அளித்தனர். இதற்கிடையே மகாவிஷ்ணு தலைமறைவாகி விட்டதாகவும், ஆஸ்திரேலியாவில் அவர் தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
ஊழல்-லஞ்சம் என கொள்ளை அடிப்பதையே நோக்கமாக கொண்டிருக்கும் கொள்ளைக்கார அரசிற்கு கொள்கை என்ற ஒன்றே இல்லை! பொழுதுப்போக்கான சினிமா முதல் தாகத்திற்கு அருந்தும் தண்ணீர் பாட்டில் வரை இந்த ஒரு குடும்பம் மட்டுமே அதிகாரத்தை பயன்படுத்தி அராஜக தொழில் செய்து வருகிறது. இதை எல்லாம் பாதுகாக்க தமிழ்நாட்டை காவி நாடாக மாற்ற முயற்ச்சிக்கிறதா இந்த அரசு? பாஜக அரசிற்கு பச்சை கொடி காட்டுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பணியா? பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்-மாணவர்களிடையே ஆயிரம் வன்முறைகள்! கல்லூரியை காட்டிலும் கஞ்சா-செல்போன் என பள்ளி வகுப்பறையில் பயன்படுத்தி மாணவச் சமுதாயமே சீரழிவின் உச்சியில் உள்ளது. எதை பற்றியும் கவலைப்படாமல் உதயநிதிக்கென தனி உலகம் அமைக்க பாடுபடும் அன்பில் மகேஷ் அவர்களே.. மாணவர்கள் மனதில் மதவாதத்தை விதைக்க அனுமதி அளித்தது யார்? நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஜோக்கர் சர்க்கார் நடத்தும் பொம்மை முதலமைச்சர் சரியாக இருந்தால் இவ்வளவு நிர்வாக சீர்கேடுகள் நிகழுமா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.