தமிழ் வாழ வேண்டும் என்றால் 9 கோடி தமிழர்களும் தமிழில் பேச வேண்டும். தமிழில் எழுத வேண்டும் - ப.சிதம்பரம்!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த நூலக திறப்பு விழாவில் முன்னாள் மந்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியது,
தமிழ் வாழ வேண்டும், தமிழ் வளர வேண்டும், வாழ்வதற்கும் வளர்வதற்கும் வேறுபாடு உண்டு. தமிழ் வாழ வேண்டும் என்றால் 9 கோடி தமிழர்களும் தமிழில் பேச வேண்டும். தமிழில் எழுத வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ் ஆட்சி மொழியாக என்றென்றும் இருக்க வேண்டும். தமிழ் வளர வேண்டும் என்றால் பல புதிய வடிவங்களில் மாற வேண்டும்.
இந்தச் சிறிய நூலகத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. இது தனி நூலகம் அல்ல. ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் அங்கம் இந்த நூலகம்.
சிவகங்கை பூமி தமிழ் வளர்த்த பூமி. தமிழ் வளர்த்தவர்களை தாங்கிய பூமி. புலவர்கள் மட்டுமல்ல தமிழ் புரவலர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் பல்கலைக்கழகத்தின் விதைகளை விதைத்தது வள்ளல் அழகப்பர் எங்களுக்குக் கிடைத்த வரம்.
இந்தப் பல்கலைக்கழகம் வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை நிறுவ முடிந்தது என் குடும்பத்தாருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.
இந்த நூலகத்தில் கொள்ளளவு மிக மிக அதிகம். இன்னும் விரிவுபடுத்தலாம்.
எங்களுக்கு யானை பசி. முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு அரசே இங்கே இருக்கிறது. இந்த நூலகம் யானை பசிக்கு தமிழ் அன்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கைப்பிடி சோறு தர வேண்டும். தமிழ்நாடு அரசு ஒரு பெரிய பிடிச்சோறு தர வேண்டும்.