பிரதமர் மோடி இல்லை என்றால் விஜய்க்கு கரோனா காலக்கட்டத்தில் தடுப்பூசி கூட கிடைத்திருக்காது - தமிழிசை..!
நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் ஆகஸ்ட் 15-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு பாஜக சார்பில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், ஹண்டே, முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், திமுக சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் தவெக மாநாடு குறித்து கேட்டதற்கு, “தவெக மாநாடு அரசியல் மாநாடு இல்லை. அது ஒரு நடிகரை காண வந்த கூட்டம். அவரது கொள்கை எதிரி பாஜக என்கிறார். ஆனால், முதலில் அவரது கொள்கை என்ன? என்பதிலேயே அவருக்கு தெளிவு இல்லை” என்றார்.
தொடர்ந்து அவரிடம் ஒரு திராவிட கட்சியுடன் பாஜக நேரடி கூட்டணியும், மற்றொரு திராவிட கட்சியுடன் மறைமுக கூட்டணியும் வைத்திருப்பதாக விஜய் கூறுவது குறித்து கேட்டதற்கு, “விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை. அவரது பேச்சில் முதிர்ச்சியற்ற தன்மை தெரிகிறது” என்றார்.
இதையடுத்து அவர் கச்சத்தீவு பற்றி பேசியது குறித்து கேட்டதற்கு, “விஜய் கச்சத்தீவு பற்றிப் பேசினார். ஆனால், ஏன் காங்கிரஸ் கட்சி பற்றிப் பேசவில்லை. ஏதோ திரைப்படத்தில் வரும் வசனங்களை பேசினார். அதைக் கேட்டு ரசிகர்கள் கைதட்டினார்கள் அவ்வளவு தான்” என்றார்.
மேலும் பிரதமர் மோடி குறித்து விஜய் பேசியது பற்றிக் கேட்டதற்கு, பிரதமர் மோடி இல்லை என்றால் விஜய்க்கு கரோனா காலக்கட்டத்தில் தடுப்பூசி கூட கிடைத்திருக்காது. தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டிய அவசியமில்லை. ஆனால் தாமரை தண்ணீரில் இருந்து தான் வளரும். அதுதான் இயற்கை” என்றார்.
.png)