1. Home
  2. தமிழ்நாடு

இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துழைக்கவில்லை என்றால் அவரை நீக்கிவிட்டு 10 நாட்களில்...

1

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த கங்கனாங்குளத்தில் ஓபிஎஸ் அணியினர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எம்எல்ஏ பேசியதாவது:

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அதிமுக உருவாக்கியபோது தொண்டர்களில் இருந்து தான் தலைவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை உருவாக்கினார். அதில் எந்த திருத்தமும் செய்ய முடியாத அளவிற்கு தீர்மானங்களையும் உருவாக்கினார். ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் என்ற பதவியை கொண்டு வந்து சட்ட விதிகளை திருத்தம் செய்து உள்ளார். நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை நாடலாம். ஆனால் நாங்கள் அதை எதிர்பார்க்கவில்லை.

அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். இதனை மக்கள் மட்டுமல்ல மாற்றுக் கட்சியினரும் சொல்கிறார்கள். அதிமுக, தொண்டர்கள் மற்றும் ஏழைகளுக்கான இயக்கம். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தை அவர் வகுத்த சட்டப்படி நடத்துங்கள் என்றுதான் நாங்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டோம். 2026ம் ஆண்டு டிசம்பர் வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான பதவிக் காலம் உள்ளது. ஆனால் அவசரப்பட்டு பொதுச்செயலாளர் என்ற பதவி ஏன் என நாங்கள் கேட்டோம். எடப்பாடி பழனிச்சாமி எப்படி எல்லாம் பதவி பெற்றார் என்பது எங்களுக்கு தெரியும். பதவி பெற்ற பின்னர் ஆணவத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார். பொதுச்செயலாளர் என்ற பதவியை பெற்ற பின்னர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த ஈரோடு தேர்தலில் டெபாசிட் வாங்குவது மிகவும் சிரமமான செயலாக இருந்தது.

நாம் ஒற்றுமையாக இருந்தால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமி எதையும் ஏற்க மறுத்து தேர்தலை சந்தித்தால் 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க நேரிடும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த லேப்டாப் திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நிறுத்தி வைத்தார். ஒப்பற்ற தலைவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இந்த இயக்கம் சிதறு தேங்காய் போல் எடப்பாடி பழனிச்சாமியின் செயலால் சிதறி கிடக்கிறது. டெபாசிட் கூட பிடிக்க முடியாத எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்து மண்டல வாரியாக அனுப்பி வைத்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த ஒன்பது தேர்தலிலும் தோல்வியடைந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பத்தாவது தோல்வியை அவர் சந்திக்க உள்ளார். அதிமுக என்ற இயக்கம் மக்களுக்காக கொண்டுவரப்பட்டது.

ஒன்று சேர்ந்து இருவரும் கையெழுத்திட்டு இயக்கத்தை வழி நடத்தினால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடலாம் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துழைக்கவில்லை என்றால் அவரை நீக்கிவிட்டு 10 நாட்களில் அதிமுக ஒன்றுபடும். இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடைக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஓபிஎஸ் அமைக்கும் பாஜ கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எதிர்த்து பேசியவர்களை கூட ஒன்றிணைத்து அதிமுகவை வழிப்படுத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது பக்குவத்திற்கு ஈடு இணை கிடையாது. பன்னீர்செல்வம் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்" இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like