சனாதனம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசினால் நாங்களும் மேடை போட்டு பேசுவோம் - சீமான்!
பிரபல நடிகரும், ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வருமாக இருப்பவர் பவன் கல்யாண். திருப்பதி லட்டு தொடர்பாக சமீபத்தில் எழுந்த சர்ச்சைக்காக பவன் கல்யாண் விரதம் இருந்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து சனாதன தர்மத்துக்கு எதிராக பேசக் கூடாது என்றும் கூறி வருகிறார். சமீபத்தில் பவன் கல்யாண், செய்தி தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டி சமூகவலைதளங்களில் வைரலானது. அதில் அவர் தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து பேசியிருந்தார். தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த கலைஞர்கள் பெயரை சொல்லி பாராட்டியிருந்தார். திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், சனாதன தர்மத்தை அழிக்க போவதாக சிலர் சொல்கிறார்கள். உண்மையில், சனாதனத்தை அழிக்க நினைக்கிறார்களோ, அவர்கள்தான் அழிந்து போவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து தமிழ்நாடு துணை முதல்வர் VS ஆந்திரா துணை முதல்வர் என்று சமூகவலைதளங்களில் விவாதம் நடத்தி வருகின்றனர். பவன் கல்யாண் மீது திமுகவினரும், திமுக மற்றும் உதயநிதி மீது பவன் கல்யாண் ஆதரவாளர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், சனாதனம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசினால் நாங்களும் மேடை போட்டு பேசுவோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நடிகர் விமல் நடித்துள்ள படம் “சார்”. இந்தப் படத்தை போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன் உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். சாயா கண்ணன் ஹீரோயினாக நடித்துள்ளார். அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்துவிட்டு சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, விஜய்யின் தவெக மாநாட்டிற்கு உங்களுக்கு அழைப்பு வந்ததா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இந்த மாதிரி பேச்சுக்கள் எழுந்தபோது ஒரு அண்ணனாக நான் விஜய்க்கு சொன்னது என்னவென்றால் யாரையும் மாநாட்டுக்கு அழைக்கக் கூடாது. அப்படி அழைத்தால் மாநாட்டில் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும். விஜய் மாநாட்டில் தனது கொள்கை, லட்சியம் என்ன என்பதை பேசிவிட்டு வந்துவிட வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். தவெக கட்சி வளர்ந்த பின்னர் மற்ற கட்சியினரை அழைத்து மாநாட்டில் பேச வைக்கலாம். கட்சியின் முதல் மாநாடு தொடங்கும்போது விஜய்தான் பேச வேண்டும்.
பவன் கல்யாணின் சனாதனக் கருத்துகள் குறித்த கேள்விக்கு, பெருமாள் ஆடு மாடு மேய்த்த எங்க கூட்டத்தின் இறைவன். நெய் பட்டால் கொழுப்பு பட்டால் தீட்டு என்பது வேடிக்கை. பாலில் கொழுப்பு இல்லையா, சோயா பீன்ஸில் இருந்து இல்லையா. இதில் கூட அரசியல் செய்வதா?. இது உணர்வுப்பூர்வமான பிரச்னை என்று கூறி ஒரு நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கூறிவிட்டார். அதோடு முடித்திருக்க வேண்டும். ஆனால், அந்த நெறியாளர் மீண்டும் பேசிக் கொண்டே இருக்கிறார். 5 நிமிடத்தில் முடிய வேண்டிய பிரச்னை இது. லட்டு உருட்டவே 5 நிமிடம்தான். ஆனால், இதனை 50 நாள்களாக உருட்டிக் கொண்டிருக்கிறார். சனாதனம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசினால் நாங்களும் மேடை போட்டு பேசுவோம் என்று கூறியுள்ளார்.