நான் இனி சினிமா இயக்க மாட்டேன் - பிரேமம் இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ..!
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் 'நேரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், தான் இயக்கும் புதிய படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். அதற்கு ரசிகர்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் 'நான் சினிமா படங்களை இனி இயக்க போவதில்லை, எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பது நேற்று உறுதியாகி உள்ளது. நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை' என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர் 'நான் தொடர்ந்து பாடல் வீடியோக்கள், குறும்படங்களை இயக்கி ஓடிடியில் வெளியிட முயற்சிக்கிறேன். ஏனென்றால் சினிமாவில் இருந்து விலக நான் நான் விரும்பவில்லை. என்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் கொடுக்க விரும்பவில்லை. உடல்நலம் பலவீனமாக இருக்கும்போது வாழ்க்கை எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது' என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.