1. Home
  2. தமிழ்நாடு

உங்கள் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பவன் நான் : மு.க.ஸ்டாலின்..!

Q

பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது 1274 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர் முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பொலிவு மிகுந்த பொள்ளாச்சி நகரில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியோடு பங்கேற்க வந்துள்ளேன். தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்பு, துணிவுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன்.
வாக்களிக்கத் தவறியவர்கள் நம்பிக்கையை பெறும் வகையில் 3 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றிய பெருமையுடன் உங்களை பார்க்கிறேன். உங்களிடம் உள்ள மகிழ்ச்சியையும், எழுச்சியையும் பார்க்கும்போது நாடாளுமன்ற தேர்தல், பொதுத் தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் என்ற நம்பிக்கை வந்துள்ளது எனத் தெரிவித்தார்.
’பொதியை ஏற்றி வண்டியில பொள்ளாச்சி சந்தையிலே’ என்ற பாடலை முதலமைச்சர் சுட்டிக்காட்டி பொள்ளாச்சி சிறப்புரைகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய அவர், ”கோவை மாவட்டத்திற்கு 4 முறை வந்து ஒரு இலட்சத்து 48 ஆயிரம் பேருக்கு ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளேன். இன்று 5-வது முறையாக வந்துள்ளேன். அமைச்சர் முத்துசாமி அமைதியானவர், அடக்கமானவர். அதேசமயம் ஆற்றல் மிக்க அமைச்சர். அவர் அதிகம் அலட்டி கொள்ள மாட்டார். ஆனால் களத்தில் செயல்வீரராக இருப்பவர். இது அரசு நிகழ்ச்சியா? மண்டல மாநாடா? என்று எண்ணும் அளவிற்கு விழாவை 4 மாவட்ட அமைச்சர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சி சாதனைகளாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம், மகளிருக்கு விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, மக்களுடன் முதல்வன் திட்டம், நீங்கள் நலமா திட்டம் ஆகியவை உள்ளன. கடைக்கோடி மக்களிடமும் பேசும் முதலமைச்சர் நான் தான். இதை கர்வத்துடன் சொல்லவில்லை. அடக்கத்துடன், உறுதியுடன் சொல்கிறேன்.
ஒவ்வொருவர் உணர்வையும் மதிப்பவன் நான். உங்கள் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பவன் நான். அதனால் தான் நீங்கள் நலமா திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். மக்களுக்காக சிந்தித்து சிந்தித்து திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் வளர்கிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறுகிறது. இதனைப் பார்த்து பொறாமைப்பட்டு சிலர் பொய்களையும், அவதூறுகளையும் பரப்புகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தக்க பாடம் புகட்டும் நேரம் வந்து விட்டது. நம் தமிழை, தமிழ்நாட்டை, நமது பெருமை பழிப்பவர்களுக்கு பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது எனத் தெரிவித்தார்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தி.மு.க அரசு செய்த பணிகளை பட்டியலிட்ட அவர், பொள்ளாச்சி பகுதியில் வேர்வாடல் நோய் காரணமாக பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அகற்ற 14 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். 3 இலட்சம் தென்னங்கன்றுகள் உழவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும், 127 ஒழுங்கு முறை விற்பனை கூடம் மூலம் தேங்காய்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்தல், தென்னை விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்படும் உள்ளிட்ட 13 அறிவிப்புகளை வெளியிட்டார். இதேபோல ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கும் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறோம். 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அதிமுக செய்ததை இப்படி பட்டியலிட்டு சொல்ல முடியுமா? மேற்கு மண்டலத்தை கோட்டை என்கிறார்கள். அவர்கள் மேற்கு மண்டலத்திற்கு என்ன நன்மை செய்தார்கள்? அதிமுக அமைச்சர்கள் மேற்கு மண்டலத்திற்கு செய்தது என்ன? மகள்களை பெற்ற அனைவரும் கதற வைத்தது பொள்ளாச்சி சம்பவம். பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த சம்பவம் அதிமுக ஆட்சியில் நடந்தது. அச்சம்பவத்தில் நடவடிக்கை எடுப்பது போல நாடகம் போட்டார்கள்.
அவ்வழக்கில் சாட்சிகள் மிரட்டப்படுவதை வேடிக்கையை பார்த்தார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி வெளிப்படையாக அறிவித்த அக்கறையற்ற ஆட்சி தான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல், தூத்துக்குடியில் 13 பேரை சுட்டது எந்த ஆட்சியில்? குட்கா விவகாரத்தில் லஞ்சம் கொடுத்த பட்டியலில் அமைச்சர், டிஜிபி பெயர் இருந்தது.
அந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யாத கூட்டணியினர், இன்று உத்தமர் வேடம் போடுகின்றனர். மக்களை மறுபடியும் ஏமாற்ற பிரிந்தது போல டிராமா நடந்து கொண்டிருக்கிறது. தமிழர் நலனுக்கு எதிரான அதிமுக – பாஜக என்ற கள்ள கூட்டணிக்கு எதிராக, தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக சக்திகள் திமுக கூட்டணியில் ஒற்றுமையாக நிற்கிறோம். நமக்கு உதவி செய்யும் ஒன்றிய ஆட்சி அமைந்தால் இன்னும் 10 மடங்கு சாதனைகளை செய்ய முடியும் பத்து ஆண்டுகளாக மக்களுக்கு எதுவும் செய்து தராத பிரதமர் மோடியின் உத்தரவாதம் என விளம்பரம் செய்து வருகிறார்கள்.
அவரின் பழைய உத்தரவாதங்களான 15 இலட்சம் ரூபாயின் கதி என்ன? 2 கோடி வேலைவாய்ப்பு கதி என்ன? அடுத்த வாரம் தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும் போது, பழைய உத்தரவாதங்களுக்கு பதில் சொல்லுங்கள் பிரதமர் என நீங்கள் கேட்க வேண்டும். பாஜக திட்டங்களை திமுக தடுக்கிறது என பிரதமர் சொல்கிறார்.
அண்ட புளுகு, ஆபாச புளுகு என்ற பழமொழி போல இது மோடி புளுகு. எந்த திட்டத்தையும் அவர் கொண்டு வரவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை யாரும் எதிர்க்கவில்லை. ஆனாலும் இன்னும் கொண்டு வரவில்லை. பொய் சொன்னால் நம்ப நாங்கள் ஏமாளிகளா? இளிச்சவாயார்களா? பொய்யும், வாட்ஸ் அப் வதந்திகளும் தான் பாஜகவின் உயிர் மூச்சு. அவை தமிழ்நாடு மக்களிடம் எடுபடாது. அதிமுக – பாஜக கள்ள கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளார்கள். உண்மையான வளர்ச்சியை நமது நாடு காண, பாசிசத்தை வீழ்த்த, தமிழ்நாட்டை உயர்த்த, இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் எனத் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like