யார் தடுத்தாலும் நான் ராமர் கோயிலுக்குச் செல்வேன் - கர்நாடகா துணை முதல்வர்..!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ராமர் கோயில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘வழிபாட்டு நிகழ்வாக இல்லாமல், அரசியல் நிகழ்வாக கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுவதாக’ கூறி காங்கிரஸ் கட்சி விழாவைப் புறக்கணித்துள்ளது.
இது குறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பது தனிப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்களின் முடிவு என தெரிவித்திருந்த நிலையில், ’அயோத்தி ராமர் கோயிலுக்கு கட்டாயம் செல்வேன்’ என கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் சிவகுமார் அறிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் உடம்பில் மூச்சு இருக்கிறது என்றால் அதற்கு பகவான் ராமர் தான் காரணம். அவர் இல்லாமல் உலகில் ஒரு அணு கூட அசையாது. எனவே நான் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு செல்வேன். காங்கிரஸ் கட்சி புறக்கணித்தாலும் பரவாயில்லை. கர்நாடகாவின் துணை முதலமைச்சராக இல்லாமல் தனிப்பட்ட 'சிவகுமாராக' நான் அயோத்தி ராமர் கோயிலுக்குப் போகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.