உங்களுடன் நானும் எப்போதும் துணை நிற்பேன் - தூய்மை பணியாளர்களுக்கு தேநீர் வழங்கி ஊக்கமளித்த முதல்வர் ஸ்டாலின்..!
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். சென்னை புளியந்தோப்புப் பகுதியில் மழைநீர் அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களைப் பாராட்டினார். அவர்களை அருகிலிருந்த தேநீர் கடைக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு டீ-பிஸ்கட் வாங்கித்தந்து ஊக்கப்படுத்தி உற்சாகமளித்தார்.
தமிழக முதல்வரின் இந்த செயலை முன்களப் பணியாளர் அனைவரும் வியந்து வெகுவாகப் பாராட்டினார்கள். முதல்வரே, தங்களை அழைத்துச்சென்று தேநீர் வாங்கித்தந்து உதவி உற்சாகப்படுத்தியது அவரது பெருந்தன்மையையும் மனித நேயத்தையும் புலப்படுத்துகின்றன. முதல்வர் அளித்துள்ள ஊக்கம் மேலும் தங்களை பணியில் மிகுந்த ஆர்வமுடன் தொடர்ந்து ஈடுபட வழிவகுக்கும் என தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 21,000 பணியாளர்கள் சுழற்சி முறையில் 15 மண்டலங்களிலும் பணி செய்கின்றனர். அதே போன்று சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் 2,149 பணியாளர்கள், தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக சென்னையில் 5,000க்கும் மேற்பட்ட மின்களப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல், நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள். அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.