ஆளுநர் கற்பனை உலகத்தில் இருக்கிறார் - ப. சிதம்பரம்..!
இந்தியாவின் 28 மாநிலங்களில 27 மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பின்பற்றப்படுவதாக ஆளுநர் கூறியிருக்கிறார். அவர் கற்பனை உலகத்தில் இருக்கிறார் என்று பணிவுடன் சொல்ல விரும்புகிறேன். பல இந்தி பேசும் மாநிலங்களில் – குறிப்பாக பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பல அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை, ஆங்கில வகுப்புகளை நடத்துவதில்லை, அப்படி நடந்தாலும் வகுப்புகளில் மொழிப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
பல்லாயிரம் ‘ஆங்கிலம் கற்ற’ மாணாக்கர்கள் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் பேச அல்லது எழுத இயலாதவர்கள் என்பதை நான் நேரடியாக அறிவேன். அங்கு மும்மொழித் திட்டம் செயல்பாட்டில் இல்லை.
ஆழமாகப் பார்த்தால், அங்கு ‘ஒரு மொழித் திட்டம்’ தான் செயல்படுத்தப்படுகிறது. இரண்டாவது மொழி என்ற பெயரில் இந்தி மொழிக்கு நெருங்கிய தொடர்புள்ள சமஸ்கிருதம், பஞ்சாபி, போஜ்புரி போன்ற மொழிகள் ஒப்புக்காக ‘கற்பிக்கப்படுகிறது’. தென் மாநில மொழிகள் – தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் – 95 சதவீதப் பள்ளிகளில் கற்றுத்தரப்படுவதில்லை, அதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை என்பதே உண்மை.
தமிழ்நாட்டில் மாநில அரசுப் பள்ளிகளைத் தவிர தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் மற்றும் மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்த செய்தி. தமிழ்நாட்டில் இந்தி மொழியைக் கற்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தடையும் கிடையாது. தட்சிண பாரத இந்தி பிரசார சபையின் பல நிலைத் தேர்வுகளை ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் பல்லாயிரம் மாணவர்கள் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. ஆளுநர் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.