தமிழிசை நாகரீகமான அரசியல்வாதி என நினைத்தேன்... ஆனால் - சேகர்பாபு விமர்சனம்..!
சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 29) நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு மாணவர்களுக்கு புதிய விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது, “இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கட்டமைப்பை மேம்படுத்த இதுவரையில் ரூ.138 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.147.94 கோடி மதிப்பில் 265 திருக்குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
தொடர்ந்து, முதலமைச்சர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றது தொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “தமிழிசை சௌந்தரராஜன் தகப்பனார் குமரி ஆனந்தன் உடல்நிலை குன்றிய போது எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்? அவரும் அப்போலோவில் தான் அனுமதிக்கப்பட்டார். இதையெல்லாம் மறந்து தமிழிசை பேசுகிறார்.
பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தமிழிசையை நாகரீக அரசியல்வாதி என்ற பட்டியலில் வைத்திருந்தோம். இதுபோன்ற கேள்விகளால் நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட பட்டியலில் தமிழிசை உள்ளார்” என்றார்.