1. Home
  2. தமிழ்நாடு

திமுகவின் இந்த மக்கள் விரோத அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன் - அண்ணாமலை..!

1

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியை அடுத்த எஸ்.வி.ஜி.புரம் பகுதியில் உள்ள 100 பேருக்கு 2000ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மூலமாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஒருசிலர் மட்டுமே அங்கு வீடு கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இலவச மனை பட்டா வழங்கப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது என்றும், அந்த இடத்தில் யாரும் வீடு கட்டக்கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஆர்.கே.பேட்டை தாசில்தார் தலைமையில் 6 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அங்கிருந்த 50 வீடுகளை இடித்து அகற்றியதாகக் கூறப்படுகிறது. அப்போது, வீடுகளை கட்டி வந்த இலவச வீட்டு மனைப் பட்டா பயனாளிகள் கதறி அழுதுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அதிகளவில் காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில், பட்டா இடத்தில் வீடு கட்டி வசித்து வந்த 50க்கும் அதிகமான வீடுகளை, முன்னறிவிப்பு இன்றி வீடுகளில் இருந்த மக்களை வலுக்கட்டாயமாக வெளியில் தள்ளித் துன்புறுத்தி, அத்துமீறி இடித்துத் தள்ளியுள்ளது திமுக அரசு” என்று காட்டமாக குற்றம்சாட்டியுள்ளார்.

பட்டா இருந்தும் வீடுகள் இடிக்கப்பட்டதால் ஒதுங்கக் கூட இடமின்றி, வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் பந்தல் அமைத்து உட்கார்ந்திருந்த எட்டு பெண்கள் உட்பட 25 பேரையும் காவல் துறை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை,திருத்தணி யூனியன் பாஜக மண்டலத் தலைவர் திரு வீர பிரம்மச்சாரி மற்றும் ஆர்.கே.பேட்டை மண்டலத் தலைவர் பாலாஜி ஆகியோரையும் கைது செய்திருக்கிறது திமுக அரசு என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், “கும்மிடிப்பூண்டி பகுதியில் பட்டா இடத்தில் கட்டப்பட்ட தன்னுடைய வீட்டை இடித்ததால், இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன்னரே திருவள்ளூரில் ஐம்பது வீடுகளை இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு.

திமுகவின் இந்த மக்கள் விரோத அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே இழப்பீடு வழங்குவதோடு, பட்டா இடத்தை மீண்டும் அவர்களுக்கே வழங்க வேண்டும்” என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

Trending News

Latest News

You May Like